செல்போன்கள் நம் நாட்டில் நுழைந்த காலத்தில், நோக்கியா நிறுவனம் தயாரித்த செல்போன்கள்தான் முதலிடத்தில் இருந்தது. அதிக எடையுள்ள கீ-பேடு உள்ள செல்போன் பயன்படுத்திய திலிருந்து மாறி, இன்று ஸ்லிம்-டச் ஸ்கிரீன் செல்போன்களுக்கு நம் வாடிக்கையாளர்கள் மாறிவிட்டார்கள்.
டிசைன், சைஸ், துல்லியமான கேமரா, டபுள் சிம்/டிரிபிள் சிம் என பல்வேறு வசதிகளைப் போட்டிப் போட்டுக் கொண்டு தருவதால், புதிய செல்போன் நிறுவனங்கள் பழைய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பந்தயத்தில் முன்னணியில் நிற்கின்றன. நோக்கியா, சாம்சங், மைக்ரோமேக்ஸ் என போட்டியில் மல்லுக்கட்டி நிற்கும் இந்த நிறுவனங்கள் எப்படி தங்களை நம் நாட்டில் நிலைப்படுத்திக் கொண்டன, எப்படி மாறி முதலிடத்தைப் பிடித்தன என்பது பற்றி சொல்கிறார் தொழில்நுட்ப வலைபதிவாளரான சைபர்சிம்மன்.
‘‘இன்று செல்போன் என்பது அனைவருக்கும் அத்தியாவசியம் தேவைப்படும் பொருட்களில் ஒன்றாகி விட்டது. அதிலும் நாம் எந்தத் தொழில் நுட்பம் உள்ள செல்போன் வைத்திருக் கிறோம் என்ற அளவுக்கு மாறிவிட்டது இன்றைய தொழில்நுட்ப செல்போன் உலகம். செல்போன் உலகில் முதலிடம் என்பது நிரந்தரமற்றது. புதுமைகளும், வித்தியாசங்களும் அதிவேகமாக மாறிவரும் துறை என்பதால் இதில் முதலிடம் என்பது கைமாறிக் கொண்டேதான் இருக்கும்.
இந்திய செல்போன் மார்க்கெட் அதிகம் நம்பியிருப்பது நடுத்தர வருமானம் கொண்ட நபர்களைத்தான். அதிக விலை கொடுத்து வாங்கும் ஆப்பிள் போன்களை மிகச் சிலர்தான் விரும்புகிறார்கள்.
இந்தியர்கள் செல்போன் பயன் பாட்டைத் துவங்கிய காலத்திலிருந்து நீண்ட காலத்துக்கு விற்பனையில் முன்னணி வகித்த நிறுவனம் நோக்கியாதான். காரணம், அறிமுகத்தில் நல்ல தரத்திலும் மக்களுக்குப் புரியும்படியான யூசர் ஃப்ரெண்ட்லி செல்போன்களை அறிமுகப்படுத்தியது நோக்கியாதான். ஏறக்குறைய அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்திய செல்போன் நிறுவனம் என்றே சொல்லலாம். கேமரா, மியூசிக் என அனைத்து வசதிகளோடும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கிய முதல் செல்போனாகவும் நோக்கியா இருந்தது.
ஆனால், தொழில்நுட்பம் என்கிற விஷயத்தில் நோக்கியா நிறுவனம் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. இதேசமயத்தில் தான் மற்ற செல்போன் நிறுவனங்களும் இந்திய செல்போன் மார்க்கெட்டை நோக்கி படையெடுக்கத் துவங்கின. வெளிநாடுகளில் மட்டுமே இருந்த தொழில்நுட்பமாகக் கருதப்பட்ட தொடுதிரை செல்போன்கள் எனப்படும் டச் ஸ்கிரீன் செல்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகத் தொடங்கின. ஏற்கெனவே சிறிய அளவில் சாதாரணக் கீ-பேடு போன்களை விற்பனை செய்துவரும் பிரிவில் இரண்டு சிம்கார்டு தொழில்நுட்பம் கொண்ட செல்போனை கொண்டு வந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது.
டச் ஸ்கிரீன் செல்போனிலும், இரண்டு சிம்கார்டு தொழில்நுட்பம் கொண்ட செல்போனிலும் கால்பதிக் காமல் இருந்தது நோக்கியா. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சாம்சங் இந்தப் பிரிவுகளில் தன்னை நிலைபடுத்திக் கொண்டது. புதிய தொழில்நுட்பம், புதிய செயல்பாட்டு அமைப்பு என்ற அடிப்படையில் இந்தியர்களின் ஸ்மார்ட்போன் மனநிலையைப் புரிந்துகொண்டு தன்னைப் பலப்படுத்திக் கொண்டது சாம்சங். நோக்கியா தொழில்நுட்பத்தில் தவறவிட்ட இடத்தைப் புதிய தொழில்நுட்பத்தால் பிடித்தது சாம்சங்!
பழைய சிம்பியான் (SYMBIAN) ஓஎஸ்களைப் பயன்படுத்தி வந்தவர் களுக்குத் தெரிந்திருந்த அடுத்தத் தொழில்நுட்பமாக ஐஓஎஸ் (iOS) தான் இருந்தது. அது அனைவராலும் பயன்படுத்த முடியாத விலை அதிகமுள்ள ஆப்பிள் போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஆண்ட்ராய்டு ஓஏஸ்களுடன் சாம்சங் டச் ஸ்கிரீன் மொபைலை அறிமுகப்படுத்தி விற்பனையில் நோக்கியாவை முந்தியது.
சாம்சங் நல்ல தொழில்நுட்பத்தை வழங்கினாலும் சற்று விலை அதிகமுள்ள செல்போனாகவே கருதப்பட்டு வந்தது. இந்த நேரத்தில்தான் சீனாவின் செல்போன் நிறுவனங்களும், இந்திய செல்போன் நிறுவனங்களும் வரத் தொடங்கின. குறைந்த விலையில் செல்போன்களை வழங்கத் துவங்கின. வருமானம் குறைவாக உள்ளவர்களாலும் செல்போன்களை வாங்க முடியும் என்ற நிலை ஆரம்பிக்கத் துவங்கியது ஆனால், சரியான தரத்தை இந்த நிறுவனங்களால் வழங்க முடியவில்லை.
அப்போது குறைந்த விலையில் ஓரளவுக்கு நல்ல தரத்தில் ஒரு நிறுவனம் வந்தால் அதனால் முன்னணி நிறுவனம் என்ற அந்தஸ்தைப் பெறமுடியும் என்ற நிலை இருந்தது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது மைக்ரோமேக்ஸ்.
சாம்சங் தரும் அதே தொழில்நுட்பம் நோக்கியாவை போன்ற யூசர் ஃப்ரெண்ட்லி அமைப்பு, குறைந்த விலை என வாடிக்கையாளரை முழுமையாகத் திருப்திப்படுத்தும் விதத்தில் அமைந்தது மைக்ரோமேக்ஸ். அதிகமாக செல்போன் விற்பனையாகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவரும் நிலையில் இந்தியர்களின் மனநிலைக்கு ஏற்ற செல்போனை விற்கும் இந்திய நிறுவனம் ஒன்று விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது ஆச்சர்யம்தான்!
ஆனாலும், ஏற்கெனவே சொன்னது மாதிரியே இந்த இடம் நிரந்தரமற்றது. நோக்கியா நிறுவனம், மைக்ரோ சாஃப்ட் ஒப்பந்தம் மூலம் கணினிகளில் உயயோகப்படுத்தப்படும் விண்டோஸ் தொழில்நுட்பத்தோடு களமிறங்கி இருக்கிறது. சாம்சங் இன்றும் ஸ்மார்ட் போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாகவே உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்களும் போட்டியில் உள்ள நிலையில் இந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள, மைக்ரோமேக்ஸும் போராடும். அதனால் இந்திய மார்க்கெட்டில் செல்போன் நிறுவனங் களின் போட்டி தொடரும்’’ என்றார்.
அழைப்புகளுக்காவும், குறுஞ்செய்தி களுக்காவும் மட்டும் இருந்துவந்த செல்போன்கள், இன்று எங்கு செல்வது எனக் காட்டும் மேப் வசதி, இன்டர்நெட் வசதி என பல்வேறு வசதிகளை வழங்கும் ஆப்ஸ்கள் என செல்போன் ஒரு தவிர்க்க முடியாத கருவியாக மாறிவிட்ட நிலையில், இந்தப் போட்டி கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான களத்தை உருவாக்கி யுள்ளது. இதில் இந்தியர்களின் மனநிலையைப் புரிந்த நிறுவனங்கள் முதலிடத்தை நோக்கிய போட்டியில் எப்போதும் முன்னணியில் ஓடிகொண்டு தான் இருக்கும்.
செல்போன் உலகில் நிலவும் போட்டியைச் சமாளிக்க, செல்போன் நிறுவனங்கள் புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளன. கடைகள் மூலமாக அவர்கள் சென்றடையும் வாடிக்கையாளரின் அளவு குறைவாக உள்ளது என இந்த நிறுவனங்கள் நினைப்பதால் இ-காமர்ஸ் துறையைக் கையில் எடுத்துள்ளன சில நிறுவனங்கள். குறிப்பாக, மோட்டோரோலாவின் மோட்டோ-இ, ஷியோனி எம்ஐ3 போன்ற செல்போன்கள் ஆன்லைனில் மட்டும்தான் கிடைக்கும் என்பதால் அதற்கான புக்கிங்குகள் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்துவிடுகின்றன. இதெல்லாம் செயற்கையாகச் செய்யப்படும் ஹைப் (hype)தான். இதை நிஜமென்று நம்பத் தேவையில்லை என்று விமர்சனம் செய்கிற நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன. ஆக, வாடிக்கையாளர்கள் உஷாராக இருப்பது அவசியம்!
தொடரும் சாம்சங், ஆப்பிளின் வீழ்ச்சி!
ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களின் போட்டி அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமின்றி உள்நாட்டு நிறுவனங்கள் முன்னணி நிறுவனங்களுக்கு நிகராக அவற்றைவிட குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதால் தற்போது சரிவில் உள்ள முன்னணி நிறுவனங்களான சாம்சங் மற்றும் ஆப்பிளின் சந்தை பங்களிப்பு வரும் 2015-ம் ஆண்டில் முறையே 31 மற்றும் 15 சதவிகிதமாக குறையும் என பிட்ச் தரவரிசை நிறுவனம் கணித்துள்ளது. உலக ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 5 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில் அதில் 15 சதவிகிதத்தை சீனாவின் ஷியோமி நிறுவனம் பிடித்துள்ளது. இது சாம்சங்கின் 12 சதவிகிதத்தைவிடவும் அதிகம்.