குஜராத்தின் புதிய முதல்வர் யார்? பாஜக உயர்நிலைக்குழு தீவிர ஆலோசனை.

 bjp-meetதற்போதைய குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அடுத்த பிரதமராகிவிடுவார் என்று ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் குஜராத்தின் புதிய முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்த மாநில பாஜகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் காந்திநகரில் நேற்று நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்ற கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவியுள்ளது.

அதனால் தற்போது குஜராத் முதல்வராக உள்ள நரேந்திர மோடி பிரதமராகிவிட்டால், அவருக்கு பதிலாக குஜராத்தின் புதிய முதல் வராக யாரை நியமிப்பது என்பது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 இதுதொடர்பாக கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்.சி.பால்டு தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நேற்று காந்தி நகரில் நடைபெற்றது. இதனையடுத்து முதல்வர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றது.

இதுகுறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விஜய்ரூபானி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் குஜராத்தின் புதிய முதல்வர் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், அதுவும் கட்சியின் மேலிடத்தின் ஆலோசனைபடியே நடக்கும் என்றும் கூறினார்.

Leave a Reply