புதுச்சேரியின் புதிய முதல்வர் யார்? முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறல்
தமிழகத்தில் புதிய முதலமைச்சராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றுவிட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவாரம் ஆகியும் புதுச்சேரியில் இன்னும் முதலமைச்சர் யார்? என்பதையே அறிவிக்காமல் காங்கிரஸ் திண்டாட்டத்தில் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அம்மாநில முதல்-அமைச்சர் யார் என்பதை தேர்வு செய்ய டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகிய 3 பேர்களும் முதலமைச்சர் பதவியை பிடிக்க தீவிர முயற்சி எடுத்துள்ளதால் முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருவதாக கூறப்படுகிறது.
இன்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளதாகவும் விரைவில் சோனியா காந்தியை அவர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்துக்கான சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தோம். தேர்தல் வெற்றி குறித்தும் மாநில நிலவரங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தோம்.
புதுவை மாநிலத்துக்கு முதல்-அமைச்சர் யார்? என்பதை கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும். அனைத்து நிலைமைகளையும் சாதக பாதகங்களையும் ஆராய்ந்த பிறகே முதல்-அமைச்சர் யார்? என்பது தலைமையால் அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் இதுகுறித்து உடனே ஆலோசிக்க முடியவில்லை. அதனால் தான் காலதாமதம் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வோம்.
முதல்-அமைச்சர் பதவிக்கு போட்டி இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. அரசியலில் யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் யார் முதல்- அமைச்சர் என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். முதல்-அமைச்சர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் அமைச்சரவையில் தி.மு.க. விற்கு இடம் ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.