தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? லயோலா கல்லூரியின் சர்வே முடிவு
வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும், யார் அடுத்த முதல்வர், எந்த கட்சிக்கு எத்தனை சதவிகித ஓட்டு வங்கி உள்ளது என்பது குறித்த சர்வே ஒன்றை லயோலா கல்லூரி மாணவர்கள் எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் சென்று பல வாக்காளர்களை சந்தித்து அவர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாக இந்த சர்வே இருக்கும் என கூறப்படுகிறது.
28 மாவட்டங்களில், 80 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை 3,320 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பின் முடிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி இன்றே சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க. 34.1 சதவீதமும், தி.மு.க 32.6 சதவீதம் வாக்குகளும் பெறும் என கூறப்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் வெறும் 1.5 சதவிதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் அடுத்த ஆட்சி எங்கள் ஆட்சிதான் என்று தமிழகம் முழுவதும் முழங்கி வரும் தேமுதிகவுக்கு 4 சதவிகிதமும், பாமகவுக்கு 3 சதவிகிதமும் கிடைத்துள்ளது. இந்த இரு கட்சிகளும் தமிழகத்தில் செல்வாக்கை இழந்துள்ளது என்பதையே இந்த சர்வே கோடிட்டு காட்டுகிறது.
அடுத்த முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு என்பதில் ஜெயலலிதா முதலிடத்தையும், ஸ்டாலின் இரண்டாவது இடத்தையும், கருணாநிதி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜெயலலிதாவிற்கு 32 சதவீதமும், மு.க.ஸ்டாலினுக்கு 28 சதவீதமும், கருணாநிதிக்கு 21.33 சதவீதமும், விஜயகாந்திற்கு 6.24 சதவீதமும், அன்புமணிக்கு 2.27 சதவீதமும், வைகோவுக்கு 1.85 சதவீதமும், சீமானுக்கு 1.84 சதவீதமும், திருமாவளவனுக்கு 1.13 சதவீதமும், ஜி.கே.வாசனுக்கு 1 சதவீதமும், தமிழிசைக்கு 0.93 சதவீதமும் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.