பிரிட்டன் பிரதமருக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் தெரசா மே முதலிடம்
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு அந்நாட்டின் பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் டேவிட் கேமரூன் அறிவித்தார். எனவே அவருக்கு பதிலாக புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களின் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று தொடங்கியது.
இந்த வாக்குப்பதிவில் உள்துறை அமைச்சர் தெரசா மே முதலிடத்தையும், எரிசக்தித் துறை அமைச்சர் ஆண்ட்ரியா லீட்ஸ் இரண்டாவது இடத்தையும், நீதித் துறை அமைச்சர் மைக்கேல் கோவ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். நான்காவது இடத்தை பிடித்த பணியாளர் நலத் துறை அமைச்சர் ஸ்டீஃபன் கிராப் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்.
மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறும் இந்த வாக்கெடுப்பில், கன்சர்வேடிவ் கட்சியின் 330 எம்.பி.க்கள் இரண்டு இறுதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கட்சிக் கூட்டத்தில் அந்த இருவருக்கும் இடையே போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெறுபவரே அடுத்த பிரிட்டனின் பிரதமர் ஆவார்.
இதுவரை வெளிவந்த கருத்துக்கணிப்புகளின்படி தெரசா மே அவர்கள் பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.