இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார்?
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருக்கும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த கவர்னர் யார் என்பது குறித்த விபரத்தை விரைவில் அறிவிப்போம் என்றும் புதிய ஆளுநரைத் தேர்வு செய்ய குழு எதுவும் அமைக்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒருபுறம் ரகுராம் ராஜனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி வந்த நிலையில் இன்னொரு புறம் பிரதமர், நிதியமைச்சரை ரகுராம் ராஜன் சந்தித்து பேசியதால் அவரே இந்த பதவியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனக்கு பதவி நீட்டிப்பு தேவையில்லை என்றும் பதவிக்காலம் முடிந்ததும் கல்விப்பணிக்கு செல்லவுள்ளதாகவும் ரகுராம்ராஜன் தெரிவித்துவிட்டார்.
எனவே அவருடைய பதவிக்கு தகுதியான நபரை தேர்வு செய்யும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ், ஆர்பிஐ முன்னாள் துணை ஆளுநர் சுபீர் கோகர்ண் ஆகியோர் ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியபோது, “ஆர்பிஐ புதிய ஆளுநர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இதில் தேவையற்ற ஊகங்களுக்கு இடமளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. இதற்காக ஆளுநரைத் தேர்வு செய்யும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. தேர்வுக் குழு எதுவும் அமைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ ஆளுநர் பதவி விஷயத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை சர்ச்சையும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. புதிய ஆளுநரின் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு இந்தப் பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி விழும்.
பதவி நீட்டிப்பு வேண்டாம். கல்விப்பணிக்கு செல்கிறேன். ஆர்பிஐ கவர்னர் ரகுராம்ராஜன்
Who is the next RBI governor?