தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? விஜயதாரிணி எம்.எல்.ஏ பதில்
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ராஜினாமா செய்து பல மாதங்கள் ஆகியபோதிலும் இன்னும் காங்கிரஸ் தலைமை புதிய தலைமைய அறிவிக்காமல் உள்ளது.
புதிய தலைவருக்கு குஷ்பு, ப.சிதம்பரம், வசந்தகுமார், உள்பட பலர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயதாரிணி எம்.எல்.ஏ, ” தமிழக காங்கிரஸ் தலைவரை எங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விரைவில் அறிவிப்பார்கள். இதற்காக 9 பேரிடம் கட்சியின் தலைமை நேர்காணல் நடத்தியுள்ளது. கட்சியின் தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் இணைந்து செயல்படுவோம்’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் இந்த பேட்டியில் கூறியதாவது, ‘இந்தியாவின் கடல் பகுதிகளை பா.ஜனதா முழுமையாக இணைக்காததால் பாதுகாப்பானதாக இல்லை. இனயம் துறைமுக திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அந்த திட்டத்தால் மீனவ கிராமங்கள், குடியிருப்புகள் அழிக்கப்படும் சூழல் இருக்கிறது. ஆகையால் திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு மறுசீரமைப்பு செய்து கொடுக்கப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கவேண்டும். மக்களுக்கு பயன் உள்ள திட்டமாக இருந்தால் எதிர்ப்பு இல்லை’ என்று கூறியுள்ளார்.