சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க கூட மனம் இல்லாமல், அவசர அவசரமாக தனது கட்சியின் எம்எல்ஏ ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் பத்தே நாளில் தேர்தலை கொண்டு வந்தது யார்? என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்து வரும் ஜெயலலிதா, இந்த இடைத்தேர்தலுக்கு காரணம் எதிர்க்கட்சிகளின் சதியே என்று பேசி வருகிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் தனது பங்கிற்கு இந்த இடைத்தேர்தல் வர யார் காரணம்? என்ற கேள்வியை எழுப்பி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: “அரசியலில் மக்களிடத்திலே உண்மையை சொல்வதற்கு திராணி இருக்க வேண்டும். அப்படி திராணி அற்றவர்கள்தான் உண்மைக்கு மாறான பொய்யான செய்திகளை மக்களிடத்திலே கொண்டு செல்வார்கள். அப்படி செய்யப்படும் அரசியல் எக்காலத்திலும் மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதுதான் வரலாறு.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் அரசியல் சதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். சிறப்பு நீதிமன்றத்தால் ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு, பதவியை இழந்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உரிய தீர்ப்பு வரும்வரை காத்திருக்க மனம் இல்லாமல், அவசர அவசரமாக அதிமுக எம்எல்ஏ வெற்றிவேலை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் பத்தே நாளில் தேர்தலை கொண்டு வந்தது யார்?
ஆர்.கே நகர் தொகுதி மக்கள் மீது தேர்தலை திணித்துவிட்டு “வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என கூறக்கூடாது. ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் திணிப்புக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவே முழுமுதற் காரணமாவார் என அத்தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் 4992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தக் கூடுதல் மின்சாரத்திற்காக 2011ல் இவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, எந்த திட்டங்களைத் துவக்கி, அதன் மூலம் இந்த கூடுதல் மின்சாரத்தை பெற்றார் என்பதை தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்கமுடியுமா?
சென்னையை தாண்டினால் அனைத்து இடங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. நேற்றுகூட கோவை மாவட்டத்தில் மின்தடையால் சுமார் 30 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போய் வீணானது. தமிழகத்தில் தற்போது வரை மின்பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கிறது. அதை மறைப்பதற்காக தனியார் மின்நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை பெறுவதுதான் உண்மை. மக்களின் வரிப்பணத்தை வீணடித்து செய்யப்படும் இது போன்ற செயலை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட காற்றாலை மின் உற்பத்தியாளர்கள், காற்றாலை மின்சாரத்தை குறைந்த விலைக்கு தமிழக அரசுக்கு கொடுத்தும், அதை வாங்க மறுக்கிறது என்ற புகாரை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர். தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கும் அதிமுக அரசு, குறைந்த விலையில் கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை வாங்க மறுப்பதன் மர்மம் என்ன? இதில் ஊழல் நடந்திருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் ஏற்கனவே மின்கட்டண உயர்வால் விழிபிதுங்கிப்போய் அவதிப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் மீது, அடுத்த ஆண்டிலேயே மீண்டும் மின் கட்டண உயர்வு திணிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தக்கூடும்.
கடந்த 2001-2006 அதிமுக ஆட்சியில் ஒரு மின்திட்டம் கூட செயல்பாட்டிற்கு வரவில்லை. 2008-ல் இருந்து அறிவிக்கப்பட்ட சுமார் 5000 மெகாவாட் மின்உற்பத்தி திட்டங்கள் 2011ல் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 2015 ஆகியும் சுமார் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தித் திட்டங்கள் மட்டுமே மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த காலதாமதத்திற்கு காரணம் முழுக்க முழுக்க அதிமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற மெத்தனப் போக்கேயாகும்.
2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபின் நீலகிரி மாவட்டம் சில்லஹள்ளா மின்திட்டம், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மின்திட்டம் போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அவை எந்த நிலையில் இருக்கிறதென்றே தெரியவில்லை. இந்த உண்மைகளையெல்லாம் “முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல” மறைக்கப் பார்க்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா என தமிழக மக்கள் கூறுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.