சென்னை நகர மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தை யார் கொண்டு வந்தது என்பது குறித்த சர்ச்சைகள் தமிழக அரசியல் கட்சிகள் இடையே எழுந்துள்ளது.
இது திமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கூறிவந்த நிலையில் இந்த திட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்தான் உறுதியானது என்றும், கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ ரயில் பணிகள் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே முடிந்ததாகவும், தற்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் இந்த திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த திட்டம் வெற்றிகரமாக துவங்கப்பட்டதற்கு பாமகதான் காரணம் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, ‘சென்னை மெட்ரோ ரயில் துவங்கப்பட்டது என்பது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி. சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில் தான் சென்னை போக்குவரத்து பிரச்னையை தீர்க்கும் எனச்சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மெட்ரோ ரயிலை கொண்டு வந்தது பா.ம.க. தான்.
மெட்ரோ ரயிலில் தற்போது நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் கூடுதலாக உள்ளது. ஏழை எளிய மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்கள் பயண்படுத்தும் விதமாக மெட்ரோ ரயிலின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். அதேபோல் சென்னை மாநகரத்தின் அனைத்து பகுதிகளுக்கு மெட்ரோ இரயில் திட்டததை விரிவு படுத்தவேண்டும். சென்னையைத் தொடர்ந்து கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களிலும் மெட்ரோ ரயிலை கொண்டு வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.