பணம் வாங்கிய விவகாரத்தை திசை திருப்ப வெளிநடப்பா?
சசிகலா அணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவு கொடுக்க கருணாஸ் உள்பட அதிமுக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் ரூ.10 கோடி வரை பணம் பெற்றதாக சமீபத்தில் ஒரு ஊடகம் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை திசை திருப்பவே அ.தி.மு.க அரசின் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களான தனியரசு, கருணாஸ், தமீமூன் அன்சாரி ஆகியோர் மாட்டிறைச்சி விவகாரத்தை கையில் எடுத்து நேற்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மாட்டிறைச்சி தடை விவகாரத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பதிலில் திருப்தி இல்லை’ என்பதுதான் இவர்களது வெளிநடப்புக்கான காரணமாக முன்வைக்கப்பட்டாலும் உண்மையான காரணம் தங்கள் மீதான் இமேஜை சரிசெய்யவே இந்த வெளிநடப்பு நடந்துள்ளதாக அரசியல் விமர்சகர்களும் தொலைக்காட்சி விவாதங்களில் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை தனியரசு எம்.எல்.ஏ மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘இந்த குற்றச்சாட்டுக்கள் வெளிவரும் முன்பே, நாங்கள் மாட்டிறைச்சி தடை தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரவேண்டி முதல்வருக்கும், பேரவைத் தலைவருக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். நீதிமன்றத்தில் இவ்விவகாரம் இருப்பதால், தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக அரசுத் தரப்பில் சொல்கிறார்கள். அது சரிதான். அதே சமயம், நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதற்காகவே வெளிநடப்பு செய்தோம். கருணாஸ், தீர்மானம் எதுவும் கோரவில்லை. எனவே, ‘கம்’மென்றுதான் இருந்தார்; ஆனால், நான்தான் இந்தக் கோரிக்கை வலுவடைய வேண்டும் என்று கருணாஸிடம் எடுத்துச்சொல்லி வெளிநடப்பு செய்யவைத்தேன்’ என்று கூறினார்