அணுசக்தி வழங்கும் குழுமத்தில் சேர இந்தியா-பாகிஸ்தான் முயற்சி
NSG என்று அழைக்கப்படும் அணுசக்தி வழங்கும் குழுமத்தில் இந்தியா சேருவர்தற்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இதே முழுமத்தில் சேர பாகிஸ்தானும் முயற்சி செய்து வருவதாகவும் அதற்காக அந்நாடு அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
NSG குழுமத்தில் இந்தியா சேர அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது. சமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்றபோது அமெரிக்க அதிபர் ஒபாமா இதை உறுதி செய்துள்ளார். ஆனால் இந்த குழுமத்தில் இந்தியாவை சேர்க்க தொடரந்து சீனா எதிர்த்து வருகிறது. ஒபாமாவை தொடர்ந்து மெக்சிகோ அபதிபரும் இந்தியாவிற்கு ஆதரவு அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் அணுசக்தி வழங்கும் குழுமத்தில் இடம் பெற விரும்புகிறது. இதுகுறித்து பாகிஸ்தான், கடந்த மாதம் வியன்னாவில் தனது விண்ணப்பத்தை முறைப்படி அளித்தது. ஆனால் NSG குழுமத்தில் பாகிஸ்தான் சேருவதற்கு ஆதரவு தெரிவிக்க அமெரிக்கா விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஜலில் அப்பாஸ் ஜிலானி அமெரிக்க அதிபருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் பாகிஸ்தானின் நிலையை எடுத்துக்கூறி, என்.எஸ்.ஜி.யில் சேருவதற்கு அமெரிக்கா ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தொழில் நுட்ப அனுபவம், தகுதி, அணுசக்தி பாதுகாப்பில் திடமான உறுதி ஆகியவற்றின் அடிப்படையில் அணுசக்தி வழங்கும் குழுமத்தில் பாகிஸ்தான் இடம் பெற விரும்புகிறது. பாகிஸ்தான் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக அணுமின் நிலையங்களை பாதுகாப்பாக இயக்கி வருகிறது. பாகிஸ்தானின் எதிர்கால எரிசக்தி பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் நீடித்து நிலைத்து நிற்கத்தக்க சிவில் அணுசக்தி தேவைப்படுகிறது. அணுசக்தி வர்த்தக நாடுகளின் நலனையொட்டி அணுசக்தி வழங்கும் குழுமத்தில் பாகிஸ்தானின் அங்கத்துவம், அவசியம். அமெரிக்காவுடனும், சர்வதேச சமூகத்துடனும் பாகிஸ்தான் இணைந்து நின்று, அணு ஆயுதப்பரவலுக்கு எதிரான திட்டங்களில் பங்களிப்பு செய்ய தயாராக இருக்கிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தாலும் அமெரிக்க அதிபரும், அமெரிக்க செனட் சபையும் இதற்கு ஆதரவு அளிக்காது என்றே கூறப்படுகிறது.