“விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தலே இதற்கான முக்கியக் காரணம். உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அக்கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்த்திசையில் உணவுக்குழாய்க்கு செல்கிறது. உணவுக்குழாயை சுற்றியுள்ள சதைகளில் அந்த அமிலம் ஏற்படுத்தும் தாக்கத்தால் விக்கல் ஏற்படுகிறது.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு, சிறுநீர் வழியே வெளியேறாத நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் கலந்து விடுவதாலும் விக்கல் ஏற்படும். நரம்பு மண்டலக் கோளாறு மற்றும் நுரையீரலில் ஏற்படும் கிருமித் தொற்று ஆகியவற்றாலும் விக்கல் ஏற்படும். விக்கலை நிறுத்த முதலுதவியாக சில கை வைத்தியங்களை மேற்கொள்ளலாம். சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நின்று போகும். பாலிதீன் பைக்குள் சுவாசித்தலும் (கவனம்: சில நொடிகள் மட்டும்தான்) இதற்குத் தீர்வாக அமையும்.
ஏனெனில், பாலிதீன் பைக்குள் இருக்கிற ஆக்சிஜன் சிறிது நேரத்தில் தீர்ந்துபோய் கார்பன் டை ஆக்ஸைடையே சுவாசிக்க நேரும்போது விக்கல் நிற்கும். இதுபோன்ற முதலுதவிகளுக்கு விக்கல் கட்டுப்படவில்லையென்றால் மருத்துவத் தீர்வை நாடுவது நல்லது. பொதுவாகவே நம் உணவு முறையில் அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும். கார வகை, எண்ணெய் மற்றும் மசால் பொருட்களைத் தவிர்த்து விடுதல் நல்லது. நல்ல உணவுப்பழக்கத்தை மேற்கொண்டும் விக்கல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி பரிசோதனைக்குப் பின்னர் தீர்வை நாடலாம்…”