முதல்வரை புகழ்ந்த துரைமுருகன். இதுதான் பின்னணியா?
நேற்று சட்டசபையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திமுகவின் எம்.எல்.ஏ துரைமுருகன் புகழ்ந்து தள்ளியதற்கு காரணம் சசிகலாவை வெறுப்பேற்றவே என்ற தகவல் கிடைத்துள்ளதால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
காமராஜர், அண்ணா காலத்திற்கு பின்னர் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மோதல் போக்கையே சட்டமன்றத்தில் கடைபிடித்து வந்தது. குறிப்பாக ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவருமே மாறி மாறி முதல்வர் பதவியில் இருந்தபோது எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாகவே பார்த்தனர்.
ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதல்வர் பொறுப்பை ஏற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் எளிமை மற்றும் சரியான நடவடிக்கையை திமுகவினர் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக வர்தா புயலின்போது எடுத்த நடவடிக்கை, மாணவர் போராட்டத்தை கையாண்ட விதம், ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை எதிர்த்தது ஆகியவை அனைத்து தரப்பினர்களையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்நிலையில் நேற்று எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் சட்டமன்றத்தில் பேசியபோது, “ஓ.பன்னீர்செல்வம் 5 ஆண்டுகள் முதல்வராக தொடர வேண்டும், அவரால் எந்த பிரச்னையும் வராது முதல்வருக்கு தேவையான சக்திகளையும் நாங்கள் தர தயாராக இருக்கிறோம் ” என்று கூறினார்.
இதன் பின்னர் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி கூறும்போது ,” தமிழக சட்டபேரவையில் எளிமையான முதலமைச்சர் கிடைத்துள்ளார், சட்டப்சபையில் தாங்கள் எதிர்பார்த்த ஜனநாயகம் தற்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது, இந்த நிலை தொடர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்
இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு கூறுகையில், ” ஜல்லிகட்டு சட்டத்தை பெற்றுத் முதல்வருக்கு நன்றி ,முதல்வரே ஜல்லிக்கட்டு நாயகன்” என்று புகழ்ந்து தள்ளினார்கள்.
துரைமுருகன் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் புகழ்வதற்கு முக்கிய காரணம், முதல்வர் பதவிக்கு எந்த காரணத்தை முன்னிட்டும் சசிகலா வந்துவிடக்கூடாது என்பதுதான் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது