கமல் அறிக்கையால் பழிவாங்கவில்லை. மின்சார வாரியம் விளக்கம்
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வந்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையின் லட்சக்கணக்கான மக்கள் பெரிய பாதிப்பை அடைந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தவுடன் கமல்ஹாசன் அரசை குறைகூறும் நோக்கத்தில் தான் அந்த அறிக்கையை வெளியிடவில்லை என்றும் தனது அறிக்கை யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கமல் அலுவலகம் இருக்கும் ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் நிவாரண பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும், அந்த பகுதியில் மின்விநியோகமும் சீராகவில்லை என்றும், இது கமலின் அறிக்கையால் வந்த விளைவு என்றும் ஒருசில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. “நடிகர் கமல்ஹாசனை குறிவைத்து எல்டாம்ஸ் சாலையில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. அந்தப் பகுதியில் வெள்ளநீர் தேங்கி இருந்தது. அதனால் மழையின்போது அறுந்து விழுந்த மின்கம்பிகளை சரி பார்க்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதற்கும் நடிகர் கம்ல்ஹாசன் கூறிய கருத்து காரணமாக பழிவாங்கல் நடந்ததாக எழும் பேச்சுக்கும் தொடர்பே இல்லை.” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary: Why EB power is not in Alwarpet explained EB Department