தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்தது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு வந்ததால் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த தேர்தலில் மே 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கூறிய தேர்தல் ஆணையம் தற்போது தேர்தலை இந்த இரண்டு தொகுதிகளிலும் ரத்து செய்துவிட்டது. இந்திய வரலாற்றில் தேர்தலை ரத்து செய்வது என்பது இதுவே முதல்முறையாகும்
இந்நிலையில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என ஒருசில அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ள நிலையில் தற்போது தேர்தலை ரத்து செய்தது ஏன்? என விளக்கம் கொடுத்துள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் மே 16ம் தேதி தேர்தல் நடத்துவதாக இருந்தது. இதற்காக எங்களது பார்வையாளர்களை ஒவ்வொரு தொகுதிகளுக்கும் நியமித்தோம். ஒவ்வொரு தொகுதிகளிலும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக. அப்போது, வாக்காளர்களுக்கு அதிக பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதாக எங்களுக்கு தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. அதோடு வருமான வரித்துறை அதிகாரிகளும் அங்கிருந்தார்கள்.
இந்த நிலையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் இருந்து அதிக புகார்கள் வந்ததால் மே 23ம் தேதிக்கு தேர்தலை தள்ளி வைத்தோம். அப்படியிருந்தும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள் கொடுப்பது நிறுத்தப்படவில்லை. அதனால், மே 23ல் இருந்து ஜூன் 13ம் தேதிக்கு தேர்தலை தள்ளி வைத்தோம். ஆனால், தொடர்ந்து இப்படிப்பட்ட நிலையே நீடித்ததால் வாக்காளர்கள் சுயமாக வாக்களிப்பது கடினம். இந்த சூழ்நிலையில் தேர்தலை நியாயமாக நடத்துவது கடினம் என்பதாலேயே தேர்தலையே நாங்கள் ரத்து செய்துள்ளோம். எப்போது தேர்தல் என்று நாங்கள் புதிதாக அறிவிப்போம்
இவ்வாறு தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.