வேறுவழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது: டிஜிபி விளக்கம்
தூத்துகுடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் காவல்துறையினர் மீது அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் இந்த துப்பாக்கி சூடு நடந்தது ஏன் என்று காவல்துறை டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்தும், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தும் எரித்தனர். கண்ணாடிகளை சேதப்படுத்தியதால் போராட்டக்காரர்கள் சட்டவிரோத கும்பல் என அறிவிக்கப்பட்டனர்.
மேலும், அவர்களுக்கு தகுந்த எச்சரிக்கை விடப்பட்டது. அதன்பின்னரே, கண்ணீர் புகைக்குண்டுகளை உபயோகித்தும், தடியடி நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் வேறுவழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் அமைதி நிலவ சட்டம் – ஒழுங்கு கூடுதல் இயக்குனர் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது அமைதியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.