லலித மோடிக்கு உதவியது ஏன்? சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு நாட்டை விட்டு ஓடி தலைமறைவாக இருக்கும் ஒருவருக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்ததாகவும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியிருக்கும் நிலையில் “லலித் மோடியை காப்பாற்றுவதற்காக இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதவில்லை. ஒரு இந்திய பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே கடிதம் எழுதினேன்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சற்று முன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் லோக்சபாவில் இன்று விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “என்னைப் பற்றி வெளியிடப்பட்ட அவதூறு தகவல்கள் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க விரும்புகிறேன். தற்போது எதிர்க்கட்சிகள் அவைக்கு வராததை சாதகமாக எடுத்துக் கொள்ளவில்லை. எனது தரப்பு நியாயங்களையும், விளக்கங்களையும் முன்வைக்க வாய்ப்பு தராதது நியாமற்றது. ஊடகங்கள் என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள். 2 வாரங்கள் கடந்து விட்டன. இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை. விவாதத்திற்கு வாய்ப்பு கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்.
விசா விவகாரத்தில் லலித்மோடிக்கு நான் உதவவில்லை. லலித்மோடி விவகாரத்தில் என் மீதான புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை. லலித்மோடிக்கு விசா வழங்கியது இங்கிலாந்து அரசு எடுத்த முடிவு. இங்கிலாந்து அரசின் முடிவுகளில் என் பங்கு எதுவுமில்லை. மனிதாபிமான அடிப்படையிலேயே பிரிட்டன் அரசிற்கு கடிதம் எழுதினேன். லலித் மோடியை காப்பாற்றுவதற்காக அல்ல. ஒரு இந்திய பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காக.
கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் லலித் மோடியின் மனைவிக்கு போர்ச்சுகல்லில் சிகிச்சை கிடைக்கத்தான் கடிதம் எழுதினேன். ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்ற உதவியது குற்றம் என்றால், நான் அந்த குற்றம் செய்ததை ஒப்புக் கொள்கிறேன். அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறியதாலேயே அந்த கடிதத்தை எழுதினேன்” என்று விளக்கம் அளித்தார்.