இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனதாக ஆரிவிக்கப்பட்டாலும், ஒருசில காரணங்களால் தமிழகத்தின் முக்கியமான ஒருசில மாவட்டங்களில் ‘ஐ’ திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்ற திடுக்கிடும் செய்தி தற்போது வெளிவந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவையை அடுத்து அதிக வசூல் தரும் மாவட்டமான வட ஆற்காடு மாவட்டத்தில் 5 தியேட்டர்களில் மட்டுமே ‘ஐ’ ரிலீஸ் ஆகியுள்ளது. அதுமட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற முக்கிய மாவட்டங்களில் ‘ஐ’ திரைப்படம் ஒரு தியேட்டரில் கூட திரையிடப்படவில்லை என்றும், அதற்கு தயாரிப்பாளருக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஊடகங்களில் ‘ஐ’ பட வசூல் குறித்து வந்து கொண்டிருக்கும் தகவல் உண்மையானவை இல்லை என்றும், படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் பாதிகூட தேறவில்லை என்றும் பல விநியோகிஸ்தர்கள் புலம்பி வருவதாகவும் கருத்து கூறப்பட்டு வருகின்றன.
போட்டியே இல்லாமல் பொங்கல் விடுமுறை தினத்தில் வெளிவந்தே இந்த நிலைமை என்றால் அஜீத்தின் என்னை அறிந்தால்’ திரைப்படமும் களத்தில் குதித்திருந்தால் ஷங்கர், ஆஸ்கார் ரவிச்சந்த்ரன் பாடு பெரும் திண்டாட்டம் ஆகியிருக்கும் என்றும் கோலிவுட்டில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகின்றது. ஐ படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.120 கோடிக்கும் மேல் ஆகியுள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து செய்தி வெளியானது. ஆனால் இதுவரை உண்மையில் ரூ.45 கோடி மட்டுமே வசூலாகியுள்ளதாகவும், பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் படத்திற்கு கூட்டம் பெருமளவு குறைந்துவிட்டது என்றும், அதுமட்டுமின்றி திருட்டு டிவிடி சகஜமாக புழங்குவதால் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.