யோவ், கண்ணை எங்கேயா வச்சிருக்க? பார்த்து வரதில்ல?’ ரோட்டில் நடந்து செல்லும்போது யாரையாவது இடித்து விட்டால் நாம் கேட்கும் வார்த்தைகள். நம்மை யாராவது இடித்துவிட்டால் நாமே கூறும் வார்த்தைகள். கண் இருந்தும் பலர் பல நேரம் குருடர்களாய் நடந்து செல்கிறோம். நடந்து கொள்கிறோம்.
ரோட்டில் சரி, விழுந்தாலும் எழலாம். யார் திட்டி காரித் துப்பினாலும் துடைத்துக்கொள்ளலாம். ஆனால் தொழிலில் கண்ணை திறந்துகொண்டு குட்டையில் விழுபவர்களை என்ன சொல்லித் திட்டுவது? கண் இருந்தும் காணாமல், அதனால் மார்க்கெட்டில் காணாமல் போகும் கம்பெனிகளை எதைக்கொண்டு அடிப்பது? கண்மண் தெரியாமல் பிசினஸை வழிநடத்தி, வழி தவறி, வழக்கொழிந்து போகும் வியாபாரிகளை எந்த வார்த்தைகளைக் கொண்டு வசைபாடுவது?
தொழிலில் இவை சாதாரணமாக நடக்கின்றன. பலர் வெற்றிகரமாக பிசினஸை துவங்கி பிறகு கண் இருந்தும் குருட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். கண்மண் தெரியாமல் பயணிக்கிறார்கள். காணாமல் போகிறார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இந்தக் கண்றாவிதான். ஏன் இப்படி?
தேவை தொலைநோக்கு
ஏனெனில் அவர்களுக்கு கண் இருந்தும் தொலை நோக்கு (விஷன்) இருப்பதில்லை. அவர்கள் தொழிலுக்கு விஷன் என்று ஒன்றை வரையறுக்கத் தவறுகிறார்கள். அதனால் பிசினஸில் தவறு செய்கிறார்கள். வாய்ப்புகளைத் தவற விடுகிறார்கள். நமக்கு எப்படி விஷன் தேவையோ அதேபோல் நம் தொழிலுக்கும் விஷன் தேவை. நம் தொழிலை வழிநடத்திச் செல்ல, வெற்றிக்கு வழிவகுக்க நம் கம்பெனிக்கும் ஒரு விஷன் தேவை.
கம்பெனி தோன்றியதன் நோக்கத்தை, அதன் செயல்களை, வழி நடத்திச் செல்ல உதவும் வேல்யூஸை, செல்ல வேண்டிய பாதையை, அடைய வேண்டிய இலக்கைத் தெளிவாக நிர்ணயித்து கம்பெனியிலுள்ள ஒவ்வொருவரையும் அந்த இலக்கை நோக்கிச் செல்லத் தேவையான உத்வேகத்தை அளிப்பதுதான் விஷன் என்கிறார்கள். ‘ஜேம்ஸ் காலின்ஸ்’ மற்றும் ‘ஜெரி பொராஸ்’ விஷனைப் பற்றி பலர் எழுதியிருந்தாலும் அதிலேயே பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, பல கம்பெனிகளை அலசி, அக்குவேறு ஆணிவேறாய்
பிரித்து மேய்ந்து அந்த சப்ஜெக்ட்டுக்குள் புகுந்து யூடர்ன் அடித்து வெளியே வந்தவர்கள் இவர்கள். 1996ல் ‘ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ’ ஜர்னலில் இவர்கள் எழுதிய ‘பில்டிங் யுவர் கம்பெனிஸ் விஷன்’ (Building Your Company’s Vision) என்னும் கட்டுரையில் விஷன் என்பது ஒவ்வொரு கம்பெனியையும் வழி நடத்திச் செல்வது. கம்பெனியின் வேகத்துக்கே உத்வேகம் அளிப்பது, கம்பெனியை வெற்றிப் பாதையில் கடிவாளம் கட்டிய குதிரையைப் போல் பயணிக்கவைப்பது என்கிறார்கள்.
விஷனை ‘கோர் ஐடியாலஜி’ (Core ideology), ‘என்விஷண்ட் ஃப்யூச்சர்’ (Envisioned future) என்று இரண்டாகப் பிரிக்கலாம். கோர் ஐடியாலஜி என்பது கம்பெனி எதற்காக இயங்குகிறது, அதன் ஆதார கலாசாரம் என்ன என்பதை விளக்க. கம்பெனி எங்கே போகிறது என்பதைவிட கம்பெனி எதற்காக இயங்குகிறது என்பது முக்கியம். ஏனெனில் கம்பெனி செல்லும் பாதை மாறலாம்; ஆனால் கம்பெனி தோன்றியதன் நோக்கம் மாறக்கூடாது. கோர் ஐடியாலஜி காலத்தால் அழியாதது; காலம்காலமாக நம்மை வழிநடத்திச் செல்ல வேண்டியது.
கோர் ஐடியாலஜியை தெளிவாக வரையறுக்க அதை இரண்டாகப் பிரித்து எழுதலாம். ‘கோர் வேல்யூஸ்’ (Core values) என்பது கம்பெனியின் ஆதார தத்துவங்களை விளக்க. உதாரணத்திற்கு ‘ப்ராக்டர் அண்ட் காம்பிள்’ கம்பெனி கோர் வேல்யூஸாக கருதுவது ‘உலகத்தரமான பொருட்கள் தயாரிப்பதை’. இரண்டாவது ‘கோர் பர்பஸ்’ (Core purpose). எதற்காக இயங்குகிறோம் என்பதை நிர்ணயிப்பது. உதாரணத்திற்கு ‘வால்ட் டிஸ்னி’யின் கோர் பர்பஸ் ‘மக்களை மகிழ்விப்பது’.
விஷனின் இராண்டாவது அங்கம் என்விஷண்ட் ஃப்யூச்சர். 20 அல்லது 30 வருடங்களில் எங்கிருக்கவேண்டும், எதை அடைய வேண்டும் என்பதைக் குறிப்பது. ‘ஏதோ எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்’ என்பது போல் இல்லாமல் ‘மூக்கின் மீது விரலை வைக்கும் அளவுக்கு நம் இலக்கு இருக்கவேண்டும். முடிந்தால் காலையே வைக்கும் அளவிற்கு இருக்கவேண்டும்!
இலக்கு நிர்ணயம்
என்விஷண்ட் ஃப்யூச்சரை இரண்டு பகுதிகளாக எழுதலாம். ஒன்று ‘பிஹாக்’. (B-HAG, Big, hairy audacious goals) அதாவது நினைத்துப் பார்க்க முடியாத மலைக்கவைக்கும் இலக்கை நிர்ணயித்துக்கொள்வது. இரண்டாவது ‘விவிட் டிஸ்க்ரிப்ஷன்’. நிர்ணயித்த இலக்கை கம்பெனியிலுள்ள அனைவரையும் உசுப்பேற்றும் விதத்தில் உயிரோட்டத்துடன், உத்வேகத்துடன் அடைந்தே தீருவது என்கிற வைராக்கியத்தைத் தூண்டும் விதத்தில் எழுதுவது.
உதாரணத்திற்கு திருபாய் அம்பானி தன் மகன்களிடம் ‘ஒவ்வொரு இந்தியனிடமும் நம் செல்ஃபோன் இருக்கவேண்டும். போஸ்ட் கார்டில் எழுதுவதை விட நம் செல்ஃபோன் சேவை சீப்பாக இருக்கவேண்டும்’ என்றாராம். உத்வேகத்துடன் செயல்பட வைக்கும் எப்பேர்ப்பட்ட வார்த்தைகள்!
’இந்த விஷன் சமாசாரம் எல்லாம் பெரிய கம்பெனிகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். நான் வைத்திருப்பதோ சிறிய பிசினஸ். அதையும் ஆரம்பித்த போது சொன்னாலாவது பரவாயில்லை. இனி என்னத்தை கழட்டுவது’ என்று அசட்டையாய், அசால்டாய் இருக்காதீர்கள். விஷன் என்பது சிறிய விதையாய் இருக்கும்போதுதான் சரியாய் பொருந்தும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. மரம் வைக்க சரியான நேரம் பத்து வருடங்களுக்கு முன்பு. அதற்கடுத்த சரியான நேரம் இப்பொழுது! அதனால் இட் இஸ் நெவர் டூ லேட்.
மதுரையில் இருக்கும் ஒரு சிறிய நிறுவனம் ஜல்லி, மணல், ரெடிமிக்ஸ் கான்க்ரீட், ப்ரீகேஸ்ட் கான்க்ரீட் ஸ்லேப்ஸ் போன்ற கான்க்ரீட் சமாச்சாரங்களை தயாரித்து விற்கிறார்கள். ஒரு உதாரணத்திற்கு இவர்கள் வரையறுத்திருக்கும் விஷனைப் பார்ப்போம்.
கோர் ஐடியாலஜி- கோர் வேல்யூஸ்
வாடிக்கையாளர் கேட்டபடி பொருட்களை உலகத்தரத்துடன், சொன்ன நேரத்திற்குள் டெலிவரி செய்வோம். வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதோடு மட்டும் நில்லாமல் அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவோம்.கோர் பர்பஸ்: கான்க்ரீட் என்றாலே எங்கள் கம்பெனிதான் நினைவிற்கு வரவேண்டும்.
எங்களைப் பார்த்து மற்ற கம்பெனிகள் பொறாமைப்பட்டு எங்களைப் போல் வரவேண்டும், வளரவேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.என்விஷண்ட் ஃப்யூச்சர்பிஹாக்: தரத்திலும் வாடிக்கையாளர் சேவையிலும் மற்ற கம்பெனிகளுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்து 2029 வருடம் Rs. 500 கோடியை அடைந்தவுடன் தான் நாங்கள் ஓய்வு எடுத்துக்கொள்வதைப் பற்றியே சிந்திப்போம்.
விவிட் டிஸ்க்ரிப்ஷன்: காலத்தால் அழியாத கட்டுமானங்கள் கட்ட உதவி செய்து, ஜல்லி, மணல் என்கிற சாதாரண பொருட்களைக் கூட ப்ரீமியம் ப்ராண்டுகளாக விற்போம். நம்பிக்கையில் ‘டாடா’ போலவும், தரத்தில் ‘சோனி’ போலவும், வாடிக்கையாளர் சேவையில் ‘சரவண பவன்’ போலவும் திகழ்வோம்.
இன்று அந்த நிறுவனத்தின் விற்பனை வெறும் Rs. 5 கோடி. ஆனால் எப்பேர்ப்பட்ட கனவு. என்ன உத்வேகம். எவ்வளவு வைராக்கியம். எத்தகைய உசுப்பேற்றும் வார்த்தைகள். Rs. 500 கோடி இல்லையென்றாலும் அதனருகிற்காவது கண்டிப்பாக செல்வார்கள். கன்ஃபர்ம்டாய் வெல்வார்கள். அதற்குண்டான விஷனை அருமையாக அமைத்துக் கொண்டுவிட்டார்களே.
நீங்களும் விஷன் ஒன்றை வரையறுத்துக்கொள்ளுங்கள். அதை கம்பெனியிலுள்ள அனைவரிடமும் விளக்குங்கள். ஒற்றுமையுடன், ஒத்த சிந்தனையுடன், ஒன்றுபட்டு செயல்படுங்கள். காலின்ஸ் சொன்னது போல் நடந்தால் கண்டிப்பாககலக்கலாம். பொராஸ் சொன்னதுபோல் செய்தால் மற்றவர் பொறாமைப்படும்படி பறக்கலாம்!