ஆகஸ்ட் மாதம் முடியப் போகிறது. ஆனால், தமிழகத்தில் இன்னும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. அக்னி நட்சத்திர வெயில் தொடர்கிறதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் கடுமை நீடிக்கிறது. இதனால் பல நோய்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கின்றன. அவற்றில் அம்மை நோய்களுக்கு முக்கிய இடமுண்டு. அதிலும் குறிப்பாகச் சின்னம்மை (Chicken pox) நோய் அதிதீவிரத் தொற்றுநோய் என்பதால், இதுதான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காரணம் என்ன?
வளிமண்டலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால், உடல் வெப்பம் அடைகிறது. இதுதான் அம்மை வரக் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. உடல் வெப்பத்துக்கும் அம்மை நோய்க்கும் தொடர்பில்லை. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ (Varicella Zoster) எனும் வைரஸ் கிருமி. இதன் மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது.
யாருக்குப் பாதிப்பு அதிகம்?
சின்னம்மை நோய், குழந்தை முதல் பெரியவர்கள் அனைவரையும் பாதிக்கும். என்றாலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்குவது இதன் இயல்பு. அதிலும் குறிப்பாக மக்கள் அதிகமாக வாழும் இடங்கள், நெரிசல் மிகுந்த இடங்கள், அசுத்தம் நிறைந்த இடங்கள், குடிசைப் பகுதிகள், விடுதிகள் போன்ற இடங்களில் வசிப்போருக்கும், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கும் இந்த நோய் விரைவில் பரவிவிடும். குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் வந்தால், மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புண்டு.
எப்படிப் பரவுகிறது?
நோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும் சளியிலும் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். அம்மைக் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறும்போது இந்த வைரஸ் கிருமிகள் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, நோயாளியோடு நெருக்கமாகப் பழகுபவர்களுக்குச் சின்னம்மை நோய் இந்த வழியில் பரவுகிறது. நோயாளியின் சளியில் இந்த வைரஸ் கிருமிகள் வெளியேறும்போது, காற்று மூலம் பிறருக்குப் பரவுகிறது. அடுத்து, நோயாளி பயன்படுத்திய உடைகள், உணவுத்தட்டுகள், போர்வை, துண்டு போன்றவற்றின் மூலமும் இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவலாம். இதனால்தான் அம்மை நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அறிகுறிகள் என்ன?
முதலில் சாதாரணத் தடுமக் காய்ச்சல் போலத்தான் நோய் தொடங்கும். இரண்டாம் நாளில் உடல்வலி, தலைவலி, சோர்வு அதிகமாகும். காய்ச்சல் கடுமையாகும். உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் ஏற்படும். வாயிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள் தெரியும். மார்பிலும் முதுகிலும் சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றும். அடுத்த 24 மணி நேரத்தில் இவை எல்லாமே நீர் கோத்த கொப்புளங்களாக மாறிவிடும்.
சின்னம்மைக் கொப்புளங்கள் முகம், மார்பு, வயிறு, முதுகு, அக்குள் போன்ற பகுதிகளில் மிக நெருக்கமாகவும் அதிகமாகவும் காணப்படும். முன் கை மற்றும் முன் கால்களில் மிகப் பரவலாகவும் எண்ணிக்கையில் குறைந்தும் தெரியும். இது சின்னம்மைக்கே உரிய முக்கியத் தடயமாகும்.
வழக்கமாக இந்த நோய் தொடங்கிய ஏழாம் நாளில் காய்ச்சல் குறையும். அடுத்த நான்கு நாட்களில் கொப்புளங்கள் சுருங்கி, பொருக்குகள் உதிரும். அம்மைத் தழும்புகள் சில மாதங்களில் சிறிது சிறிதாக மறைந்துவிடும். ஒருமுறை சின்னம்மை வந்து குணமானவருக்கு, அவரது உடலில் இந்த நோய்க்கான எதிர்ப்பு அணுக்கள் உருவாகிவிடுவதால், ஆயுள் முழுவதும் அவருக்கு இந்த நோய் மீண்டும் வராது.
சிகிச்சை உண்டு!
பொதுவாக அம்மை நோய்கள் குறித்து நம் சமூகத்தில் பலவிதமான தவறான கருத்துகளும் மூடநம்பிக்கைகளும் நிலவுகின்றன. ‘அம்மனின் கோபமே அம்மை நோய்’ என்றும், ‘அம்மைக்குச் சிகிச்சை பெற்றால் தெய்வக் குற்றமாகிவிடும்’ என்றும் அஞ்சி, பெரும்பாலோர் சிகிச்சை பெறாமல் இருந்துவிடுகின்றனர்.
கிராமப்புறங்களில், ஏன் நகர்ப்புறங்களில்கூட அம்மை நோய் ஏற்பட்டால் மருந்து, மாத்திரை சாப்பிடக் கூடாது என்ற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றி உள்ளது. அம்மைக் கொப்புளங்களில் வேப்பிலை அல்லது மஞ்சளை அரைத்துப் பூசுவது ஒன்றுதான் மருந்து என்று சொல்லி, அதை மட்டுமே தினமும் அரைத்துப் பூசுவார்கள். வேப்பிலைக்கும் மஞ்சளுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டு. ஆனாலும் இந்த நோய்க்கான வைரஸ் கிருமிகளை ஒழிக்க இவை மட்டுமே போதாது.
சின்னம்மைக்குப் பல காலமாகச் சிகிச்சை இல்லாமல் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது இந்த நோய்க்கு அலோபதி மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. ‘ஏசைக்ளோவிர்’ எனும் மாத்திரையை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குச் சாப்பிட்டால் விரைவிலேயே சின்னம்மை குணமாகிவிடும். அத்துடன் ‘ஏசைக்ளோவிர்’ களிம்பை அம்மைக் கொப்புளங்களில் தினமும் தடவினால் அரிப்பு, எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் கட்டுப்படும்.
உணவுமுறை முக்கியம்!
அம்மை நோயாளிகள் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். இதிலும் உண்மையில்லை. இவர்களுக்கான உணவில் எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை. எல்லா உணவையும் வழக்கம்போல் சாப்பிடலாம். பொதுவாக அம்மை நோயாளியின் உடலில் நீரிழப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் பால், நீர்மோர், கரும்புச்சாறு, இளநீர், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகள், அரிசிக்கஞ்சி, ஜவ்வரிசிக்கஞ்சி, சத்துமாவு, கூழ், குளுகோஸ், சத்துப்பானங்கள், உப்புச் சர்க்கரைக் கரைசல் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் வைட்டமின் ஏ சத்து நிறைந்த காரட், பப்பாளி, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.
அடுத்து, அம்மை நோயாளிகள் உடலில் கொப்புளங்கள் அனைத்தும் மறைந்த பிறகுதான் குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதுவும் தவறு. இவர்கள் வெதுவெதுப்பான உப்புநீரைக் கொண்டு காலை, மாலை இரண்டு வேளை வாயைக் கொப்பளிக்கலாம். முகத்தையும் கண்களையும் அடிக்கடி சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்துகொள்ளலாம். சுத்தமான பருத்தித் துணியாலான துவாலையைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து உடலைத் துடைத்துக் கொள்ளலாம்.
பாதிப்புகள் என்ன?
சின்னம்மை நோய் குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கினால், நிமோனியா, மூளைக்காய்ச்சல், எலும்பு சீழ்மூட்டழற்சி, இதயத்தசை அழற்சி, சிறுநீரக அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். அப்போது குழந்தையின் உயிருக்கு ஆபத்து வரலாம். கர்ப்பிணிகளுக்குச் சின்னம்மை வருமானால், கருவில் வளரும் சிசுவைப் பாதித்துப் பிறவி ஊனத்தை உண்டாக்கலாம். இவை எல்லாமே சின்னம்மை நோய் உள்ளவருக்கு உடனடியாகத் தோன்றுகிற சிக்கல்கள்.
அக்கி அம்மை
அதேநேரத்தில் காலம் கடந்து ஒரு சிக்கல், சின்னம்மை வந்தவருக்கு வருவது உண்டு. அதன் பெயர் ‘அக்கி அம்மை’ (Herpes zoster / Shingles). அதாவது சின்னம்மை நோய் சரியானாலும், இந்த நோய்க் கிருமிகள் உடலுக்குள் மறைந்திருந்து, பல வருடங்களுக்குப் பிறகு, திடீரென்று வீரியம் பெற்று, உடலில் உள்ள புறநரம்புகளைத் தாக்கும்.
இதன் விளைவால், பாதிக்கப்பட்ட அந்த உடல் பகுதிகளில், தோல் அழற்சி பெற்றுச் சிவப்பாகத் தெரியும். இதைத் தொடர்ந்து அந்த இடங்களில் அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். பத்து நாட்களுக்குப் பிறகு இந்தக் கொப்புளங்கள் காய்ந்துவிடும். பொதுவாக, அக்கி அம்மை வந்த இடங்கள் கடுமையாக வலிக்கும். இது சரியான பிறகும் இந்தப் புறநரம்பு வலி சில மாதங்களுக்கு நீடிக்கும்.
கிராமப்புறங்களில் அக்கி அம்மைக் கொப்புளங்களில் ஒரு வகை மண்ணைத் தடவுவார்கள். இதனால் அவ்வளவு பலன் கிடைப்பதில்லை. பதிலாக ‘ஏசைக்ளோவிர்’ களிம்பை அந்தக் கொப்புளங்களில் தடவினால், வலி உடனே குறையும். ‘ஏசைக்ளோவிர்’ மாத்திரைகளையும் சாப்பிடலாம். அக்கி அம்மை விரைவில் குணமாகும்.
சின்னம்மையைத் தடுப்பது எப்படி?
சின்னம்மையால் இத்தனை துன்பங்கள் வந்து சிரமப்படுவதைவிட, இதை வர விடாமல் தடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.
l சுய சுத்தம் பேணுவதும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் சின்னம்மையைத் தடுக்க உதவும் சிறந்த வழிகள்.
l அம்மை நோய் வந்துள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும்.
l அம்மை நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவது நல்லது.
l இந்த நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.
l சின்னம்மை மற்றும் அக்கி அம்மை வராமல் தடுத்துக்கொள்ள, இப்போது தடுப்பூசி உள்ளது. ‘சின்னம்மை தடுப்பூசி’ (Chicken pox vaccine) என்று அதற்குப் பெயர்.
l குழந்தைக்கு 15 மாதங்கள் முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியும், 5 வயதில் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட வேண்டும்.
l ஆரம்பத்திலேயே இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் 13 வயதுக்குள் இதைப் போடுவதாக இருந்தால், மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ளலாம்.
l 13 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்றால், இரண்டு மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக் கொள்ளவேண்டும்.
l வீட்டில், அடுத்த வீட்டில் அல்லது அலுவலகத்தில் மிகவும் நெருங்கிப் பழகும் ஒருவருக்குச் சின்னம்மை நோய் வந்துவிட்டதென்றால், அவருக்கு நோய் தொடங்கிய மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் அவரோடு பழகுகிற மற்றவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
l ஒரு தவணையை மட்டும் போட்டுக்கொண்டு, அடுத்த தவணையைப் போடாமல் விட்டவர்கள் மீண்டும் ஒரு தவணை மட்டும் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குச் சின்னம்மை வராது.
l இங்குக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது சின்னம்மை நோய் வந்த பிறகு, இந்தத் தடுப்பூசியைப் போட்டால் பலன் தராது.