தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆகி மீண்டும் முதல்வராகியுள்ள நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் கர்நாடக அரசு ஜெயலலிதா வழக்கை மேல்முறையீடு செய்ய தயங்குவதற்கு பின்னணியில் புதிய காரணங்கள் இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்னும் சில மாதங்களில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வெற்றி பெற முழு கவனமும் செலுத்தி வருகிறது. பெங்களூருவை பொருத்தவரையில் மாநகராட்சி மேயர் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் உள்ளனர். பெங்களூரில் கணிசமான அளவில் தமிழர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமுள்ள வாக்களர்களில் 20 சதவீதம் பேர் தமிழர்கள் என்தால் இந்த தேர்தலின் வெற்றித் தோல்வி தமிழர்கள் கையில் இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. எனவே அரசியல் கட்சிகள் தமிழர்களின் வாக்குகளை இழுப்பதில் போட்டிப் போட்டு வேலை செய்து வருகின்றன. இந்நிலையில், ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி, ஜெயலலிதா வழக்கில் அவசரப்பட்டு மேல்முறையீடு செய்வதன் மூலம் பெங்களூரு தமிழ் வாக்களர்களின் அதிருப்தியை சம்பாதித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இதன் காரணமாகவே மேல்முறையீட்டில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா விவகாரத்தில் மேல் முறையீடு செய்வதில் கர்நாடக அரசு தாமதம் செய்து வருவதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள சூழலில், தற்போது தமிழர்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதில் கர்நாடக காங்கிரஸ் குறியாக இருப்பது குறித்து அக்கட்சிகள் மேலும் அதிருப்தி அடைந்துள்ளன