மதுவிலக்கு அமல்படுத்திய பீகார் நிலை என்ன? ஒரு பார்வை
தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் என அரசியல் கட்சிகள் ஒருகாலத்தில் தொடர் போராட்டம் நடத்தின. தேர்தலை மட்டுமே மையமாக கொண்டு இந்த போராட்டத்தை நடத்திய எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிந்த பின்னர் அந்த கோரிக்கையையே மறந்துவிட்டன என்பது வேறு விஷயம். அதே நேரத்தில் தமிழக அரசும் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதாக ஒப்புக்கொண்டு இதுவரை 500 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளது.
இந்நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஒரே ஒரு கையெழுத்தில் மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். தடையை மீறி குடித்தால் ஜெயில் என்று சட்டம் கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் படி இதுவரை தடையை மீறி மது அருந்தியவர்கள், மது விற்பனை செய்தவர்கள், தயாரித்தவர்கள் என 12,154 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களுக்கு குறைந்தது 4 மாதங்களில் இருந்து 5 வருடங்கள்வரை இதற்கான தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
பீகார் கலால் துறையின் அறிக்கையின்படி இதுவரை 78,000 ரெய்டுகள் நடத்தப்பட்டு 2.63 லட்சம் லிட்டர் மது கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அதில் நாட்டுச் சாராயம் 85,577 லிட்டரும், எரிசாராயம் 25,790 லிட்டரும், வெளிநாட்டு மது 94,475 லிட்டரும், பீர் 9,763 லிட்டரும் கைப்பற்றி அழிக்கப்பட்டு இருக்கிறது
ஆனால் அதே நேரத்தில் மதுப்பிரியர்கள் எல்லை தாண்டும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பீகாரின் அண்டை மாநிலங்களுக்கும், எல்லையைத் தாண்டி நேபாள நாட்டில் இருக்கும் கிராமங்களுக்கும் சென்று ஒருசிலர் குடித்து வருவதாகவும் தற்போது அதற்கும் கண்காணிப்பை தீவிரபடுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன