‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது கண்ணதாசனின் காவிய வரிகள். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களோ ‘மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?’ என்று சோக கீதம் பாடுகிறார்கள். காரணம், மாதக்கணக்கில் படித்தவைகளும்கூட நொடிப்பொழுதில் மறந்து விடுவது போன்ற பிரச்சினைகளுடன் அநேக பெற்றோர் தங்கள் குழந்தைகளை என்னிடம் அழைத்து வருவதுண்டு. ‘டாக்டர், இவன் படித்ததை எல்லாம் மறந்துபோகிறான். மறந்து போகாமல் இருக்க மாத்திரை கொடுங்கள்” என்பார்கள். அதற்கெல்லாம் மாத்திரை இல்லை என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, படிக்கும் முறைகளை சொல்லிக்கொடுப்பேன். அப்போதும் பெற்றோர்கள், டாக்டரிடம் வந்தும் மருந்து, மாத்திரை இல்லாமல் வெறும் கையோடு போகிறோமே என்ற ஆதங்கத்தோடுதான் செல்வார்கள்.
மகாபாரதத்தில் கர்ணனுக்கு பரசுராமர் ஒரு சாபம் கொடுப்பார்.
அதாவது அவன் கற்ற வித்தைகள், மந்திரங்கள் எல்லாம் அவனுக்குத் தேவையான நேரத்தில் மறந்து போய்விடும் என்பதே அது. அதுபோல் மற்ற நேரங்களில் எல்லாம் நன்றாக நினைவில் இருக்கும் விஷயங்கள்’ தேர்வு எழுதும்போது மட்டும் சரியாக மறந்து விடுகிறதே, அது ஏன்?
மறதி எதனால் வருகிறது என்பதற்கு முதலில் நாம் விஷயங்களை எப்படி நினைவில் வைத்துக் கொள்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். நினைவில் வைப்பது என்பது மூன்று படிகளில் நடக்கிறது. ஆங்கிலத்தில் இதை RRR என்பர். முதலாவது, ஒரு விஷயம் நம் மூளையில் பதிவது (Registration). இரண்டாவது, பதிந்தது நம் மூளையில் நிலைத்திருப்பது (Retention). மூன்றாவது தேவையானபோது அதை நினைவின் அடுக்குகளிலிருந்து திரும்பி எடுப்பது (Recall).
நல்ல நினைவுத் திறனுக்கு விஷயங்கள் நன்கு பதிவது முதல் தேவை. பதற்றமாகவும் அவசரமாகவும் படிக்கும்போது அது பதியாது. சுற்றுப்புறத்தின் தன்மை, கவனச் சிதறல், மாணவனின் மனநிலை, படிக்கும் விஷயத்தின் மீதுள்ள ஆர்வம் போன்றவை நம் மனதில் பதிவதைத் தீர்மானிக்கின்றன.
பதிந்த விஷயங்கள் எல்லாமே நம் மனதில் நிலைத்து நிற்பதில்லை. பாடங்களைப் பொறுத்தவரை ஒருமுறை படித்ததில் ஒரு மாதம் கழித்து கிட்டத்தட்ட 80 % வரை மறந்து போய்விடுவதாகக் கண்டறிந்துள்ளனர். எனவே மீண்டும் மீண்டும் படிப்பதே நம்முடைய நினைவில் நீங்காமல் நிற்பதற்கான ஒரே வழி. அடிக்கடி படிக்கும் விஷயங்கள் சுலபமாக நினைவில் நிற்கின்றன. நீங்காமல் இருக்கும் விஷயங்களை மீண்டும் மீட்டெடுப்பது பிரச்சினை இல்லை.
மீண்டும் மீண்டும் படித்ததும்கூட தேர்வின்போது மறந்துவிடுகிறதே என்கிறீர்களா? அதற்கு மிக முக்கியக் காரணம், அவசரம், பதற்றம், பயம் போன்றவைதான். அவசரத்தில் அண்டாவில்கூட கையை நுழைக்க முடியாது. அமைதியான சூழலில் அவசரப்படாமல், பதற்றம் இல்லாமல் விஷயத்தை முழுமையாக உள்வாங்கிப் படியுங்கள். கசக்கிறதே… வலிக்கிறதே என்று படிக்காமல் இனிமையாகப் படியுங்கள். நினைவுப் பாத்திரத்தைப் பதற்றப்படாமல் கையாண்டால் அது அட்சயப் பாத்திரமாய் கைகொடுக்கும்.