மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த ஏன் அனுமதி இல்லை? சென்னை ஐகோர்ட் கேள்வி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி டி.ராஜா, இதற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, “மெரினா கடற்கரையில் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி வழங்க முடியாது. மனுதாரர் 3 மாதங்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறார். அதற்கும் அனுமதி வழங்க முடியாது. அனுமதிக்கப்பட்ட மாற்று இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால், 5 நாட்கள் வரை போராட்டத்துக்கு அனுமதி வழங்க முடியும்” என்று கூறினார்.
இதையடுத்து, “மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த ஏன் அனுமதிக்க முடியாது? என்பதற்கு விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.