ஒவ்வொரு தேர்தல் வரும்போது ரஜினி யாருக்கு ஆதரவு கொடுப்பார் என்பது குறித்து ஊடகங்கள் பலவித ஊகங்களை வெளிப்படுத்தி வருவது வழக்கம். அவரும் ஒவ்வொரு தேர்தலின் போது தான் ஆதரிக்கும் கட்சி அல்லது கூட்டணி குறித்து அறிக்கை அல்லது பேட்டி கொடுப்பார். ஆனால் இந்த முறை தமிழகத்தில் வித்தியாசமான கூட்டணி அமைந்துள்ளது.
ரஜினிக்கு மோடி பிரதமராக வரவேண்டும் என்று விருப்பம் இருந்தாலும், ஜெயலலிதாவின் நிர்வாகம், கருணாநிதியின் நட்பு, ஆகியவையும் முக்கியம். ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கூட்டணியை அமைத்துள்ளதால் யாராவது ஒருவருக்கு ஆதரவு அளித்தால் மற்றவர்கள் வருத்தப்படும் தர்மசங்கட சூழ்நிலை எழுந்துள்ளது.
மேலும் ரூ.150 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட கோச்சடையான் படத்துக்கு அவர் தெரிவிக்கும் அரசியல் கருத்தால் ஏதாவது பிரச்சனை எழவும் வாய்ப்பு உள்ளது. மோடிக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தால், அதனால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் கோச்சடையானுக்கு குடைச்சல் கொடுப்பார்களா? என்ற பயமும் அவர் மனதில் இருக்கிறது. வேட்டி கட்டிய தமிழனே அடுத்த பிரதமர் என்று சொல்லியதற்காக கமல் பட்ட பாட்டை தற்போது ரஜினி நினைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.
இதனால் இம்முறை எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்க மாட்டார் என்றும் நடுநிலை வகித்து, தனது ரசிகர்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களித்து கொள்ளுங்கள் என்று அறிக்கை விடுவதற்கு தன்னை தயார் செய்து வருகிறார்.
தனது சுயலாபத்திற்காக ரஜினி இந்த முடிவை எடுப்பாரா? அல்லது கோச்சடையான் படத்துக்கு வரும் விளைவுகள் குறித்து கவலைப்படாமல் தைரியமாக யாராவது ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.