அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் திடீரென விலக காரணம் என்ன?
கடந்த நான்கரை ஆண்டு காலமாக அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி திடீரென கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து விரைவில் புதிய கூட்டணி குறித்த தமது முடிவை அவர் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்
கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளை பெற்ற சமத்துவ மக்கள் கட்சி தென்காசி மற்றும் நான்குநேரி தொகுதிகளில் வெற்றிபெற்றது. சரத்குமார் மற்றும் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் எம்.எல்.ஏக்களாக ஆன நிலையில் திடிரேன இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் எர்ணாவூர் நாராயணனை கட்சியில் இருந்து சமீபத்தில் சரத்குமார் நீக்கியுள்ள நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் சரத்குமார் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு முதல்வர் ஜெயலலிதா மறைமுகமாக ஆதரவு தெரிவித்ததும், நடிகை மனோரமா இறந்தபோது அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் ஜெயலலிதா, சரத்குமாரை சந்திக்க மறுத்ததும் சரத்குமாரை வேதனைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எர்ணாவூர் நாராயணனுக்கு அதிமுக மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுவதும் இந்த பிரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.