பீப் பாடல் விவகாரம். சிம்பு-அனிருத் இன்று ஆஜராகாதது ஏன்? பரபரப்பு தகவல்
ஆபாச வார்த்தைகள் அடங்கிய பீப் பாடலை பாடிய சிம்புவும், இந்த பாடலுக்கு இசையமைத்த அனிருத்தும் இன்று கோவை போலீஸார் முன் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே இருவருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளதால் இருவரும் இன்று ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை இருவரும் ஆஜராகவில்லை என்றும் இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டதால் இருவரும் இன்று ஆஜராக மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று ஏற்கனவே கூறியுள்ள நடிகர் சிம்பு தன் மீதான சம்மனுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோவை போலீசாரின் சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுமீது விசாரணை நடத்திய ஐகோர்ட் நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். எனவே இந்த பிரச்சனை தற்போது நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டதால் இருவரும் கோவை போலீஸார் முன் ஆஜராக தேவையில்லை என கூறப்படுகிறது.
English Summary: Why simbu and anirudh not appear in Coimbatore Police