முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் முதல்வரின் அறைக்கே செல்லாததால் அந்த அறை காலியாக இருப்பது ஏன்? எனதி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், ”சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறை காலியாகவே இருக்கிறது. அந்த அறையின் பெயர்ப் பலகை கூட மாற்றப்படவில்லை. தற்போது முதல்வர் பொறுப்பில் இருப்பவர், முதல்வரின் அறைக்கே செல்லாமல் இருக்கிறார். அவரது அறை வாசலில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற பெயர்ப்பலகை போடப்பட்டிருக்கிறது. இதனால், தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரை ஒரு வார காலத்திற்காவது நடத்த வேண்டும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தும், அதனை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளது.
முதல்வர் மாற்றம், காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட முயற்சிப்பது, பால் விலை உயர்வு உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளைப் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க 3 நாட்கள் நிச்சயம் போதாது” எனக் கூறியுள்ளார்.