திமுக பகிரங்க அழைப்பு விடுத்தும் கூட்டணி சேர கட்சிகள் தயங்குவது ஏன்?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. அதிமுக இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கவிருப்பதாக அறிவிக்கவில்லை. பாமகவும் இரு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு முதல்வர் வேட்பாளரையும் நம்பிக்கையுடன் அறிவித்து, பிரச்சாரத்தையும் கடந்த சில மாதங்களாக நடத்தி வருகின்றது.
வைகோவின் மக்கள் நலக்கூட்டணி தங்கள் அமைப்பில் தேமுதிக, தமாக உள்பட ஒருசில கட்சிகளை இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் விரும்புவதாக தெரியவில்லை. வேறு வாய்ப்புகளே இல்லாததால் காங்கிரஸ் மட்டும் இப்போதைக்கு திமுக கூட்டணியில் இணையும் என தெரிகிறது.
இந்நிலையில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தயார் என திமுக தலைவர் கருணாநிதி நேற்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆனால் அவருடைய அறிவிப்புக்கு இதுவரை எந்த அரசியல் கட்சியும் செவிசாய்க்கவிலை. அதிமுகவுக்கு எதிரான ஓட்டு கண்டிப்பாக திமுகவுக்கு போகாது என்றும் மக்கள் நலக்கூட்டணிக்குத்தான் செல்லும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில் எந்த கட்சியும் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள திமுகவுடன் வேறு ஏதாவது கட்சிகள் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.