நேற்று முன் தினம் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான கருணாநிதி, வைகோ, தமிழிசை செளந்திரராஜன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருமாவளவன், போன்ற தலைவர்களை நேரில் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அந்தந்த கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்டு வலியுறுத்தினார்.
இதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ”மேக்கேதாட்டூ அணை பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட 5 பிரச்னைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடியை அனைத்துக்கட்சி குழுக்களுடன் சந்தித்து பேசியதாகவும், தமிழக பிரச்னைகள் அனைத்திற்கும் உரிய தீர்வு காணப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக இருக்கிறது இருப்பதாக கூறிய விஜயகாந்த் ஜெயா டிவி நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியால் டென்ஷனாகி செய்தியாளர்கள் கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு திடீரென வெளியேறி சென்றுவிட்டார்.
முன்னதாக பிரதமரை சந்திக்க விஜயகாந்த் உடன் திமுக சார்பில் திருச்சி சிவா, கனிமொழி, பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், காங்கிரஸ் சார்பில் நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, மதிமுக சார்பில் கணேசமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன், தமாக சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தலைவர் பாரிவேந்தர், ரவி பச்சமுத்து, ஜெயசீலன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.