வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டியிலும் படுதோல்வி அடைந்ததால் இந்திய அணி வீரர்கள் மனதளவில் பலவீனமாக இருப்பதாகவும், அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதை கருத்தில் கொண்டு, அடுத்த மாதம் நடைபெறவிருந்த ஜிம்பாவே தொடர் ரத்து செய்யப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை 10ஆம் தேதி முதல் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் இரண்டு 20-20 போட்டிகளில் ஜிம்பாவே அணியுடன் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வங்கதேச தொடரில் பெற்ற இரண்டு படுதோல்வி காரணமாக இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக இப்போட்டித் தொடர் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் சோர்வடைந்து போட்டிகளில் சரியாக விளையாட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் உண்மையில் இந்த போட்டி தொடரை ஒளிபரப்பும் உரிமை பெற்ற டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும் பிசிசிஐ அமைப்புக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இந்த போட்டி தொடர் ரத்து செய்யப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல் ஒன்று கூறுகின்றது
மேலும் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதான குறித்த ஆர்வம் குறைந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் பிசிசிஐ அச்சம் கொண்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் பிசிசிஐ இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.