ஜெயலலிதா-மோடி சந்திப்பில் என்ன நடக்கும். ஆச்சரியமான தகவல்கள்
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகியுள்ள ஜெயலலிதா வரும் 14ஆம் தேதி அன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் மீதுள்ள 2.5 லட்சம் கோடி கடன் சுமையை சமாளிக்கவும், சட்டமன்றத் தேர்தலில் கொடுக்கப்பட்ட இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்டாயமும் அ.தி.மு.க அரசுக்கு இருக்கிறது. இவற்றைத் தீர்க்க வேண்டுமானால், மத்திய அரசின் தயவு இல்லாமல் நிறைவேற்ற முடியாது. எனவே மத்திய அரசின் இணைந்து மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொள்ள ஜெயலலிதா முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் மத்திய அமைச்சரவையில் நேரடியாக அங்கம் வகிக்காமல், என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முடிவில் முதல்வர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவலை அ.தி.மு.கவின் தலைமைக் கழக பேச்சாளர் ஆவடி குமார் மறுத்துள்ளார். “இது முழுக்க தி.மு.கவின் திட்டமிட்ட சதி வேலை. மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ‘அ.தி.மு.கவுடன் பா.ஜ.கவுக்கு ரகசிய உறவு இருக்கிறது’ என்றெல்லாம் அவதூறு பேசினார்கள். அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில், யாருடனுடம் ரகசியக் கூட்டணியை வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. முழுக்க முழுக்க நேர்மையான முறையில்தான் யாரிடமும் கூட்டணி வைப்பார் அம்மா.
தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மத்திய அரசோடு இணக்கமான போக்கை, அம்மா கடைபிடித்து வருகிறார். மத்திய அரசில் அங்கம் வகித்து குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டிய பதவிகளை வாங்கிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை. தமிழ்நாட்டின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பது குறித்துதான் நாள்தோறும் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர். இதுபோன்ற அவதூறு செய்திகளைப் பரப்பி எங்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் தி.மு.க இறங்கினால், மேலும் மேலும் அவர்கள் தோற்றுத்தான் போவார்கள்” என்று கூறியுள்ளார். இருப்பினும் ஜூன் 14 சந்திப்பில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.