2030-ம் ஆண்டுக்குள் உலகில் 600 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வேலையின்மை என்கிற நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று ஜி-20 நாடுகளை எச்சரித்திருக்கிறது உலக வங்கி. ஜி-20 உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் நாமும் இந்தச் சூழ்நிலை உருவாகாமல் தவிர்ப்பதில் அக்கறைகாட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். வேலை இல்லா நிலை உருவாக காரணங்கள் என்னென்ன, வேலை வாய்ப்பின்மையைத் தவிர்க்க எதுமாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், உலக வங்கி சொல்லியிருப்பதுபோல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டால், எந்தத் துறையில் அதிகமான வேலைகள் கிடைக்கும் என்கிற கேள்விகளை போலாரிஸ் ஃபைனான்ஷியல் டெக்னாலஜி நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் மேலாளர் பி.பாலமுருகனிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.
வேலையாட்கள் அதிகம், வேலை குறைவு!
“வேலையின்மை என்பது படித்து முடித்து, வேலைக்குச் சேர்வதற்கான காலகட்டத்தையோ அல்லது ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்குச் சேர்வதற்கான இடைப்பட்ட காலகட்டத்தையோ குறிப்பதாகும். இன்றைய இந்தியாவில் 100 பேருக்கு 25 பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். உலக வங்கி எச்சரித்திருப்பது போன்ற சூழ்நிலை யானது உருவானால், அன்றைய நிலையில் இன்னும் அதிகமான இந்திய இளைஞர்கள் வேலையில்லா பட்டதாரி களாகத்தான் இருப்பார்கள்.
பொதுவாக, வேலையின்மை என்பது வேலை செய்பவர்களுக்கான தேவை குறைவு, வேலை செய்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது, வேலையில் எதிர்பார்ப்பு அதிகம்; அதேசமயம் போட்டியும் அதிகம் என்கிறபோது ஏற்படக்கூடியது. இன்றைய நிலையில் அதிகமாக சம்பளம் வழங்கும் இடங் களில் வேலைவாய்ப்புகள் குறைவாகவும், அதிக வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களில் சம்பளமானது குறைவாக வும் இருக்கும் சூழ்நிலைதான் காணப்படு கிறது.
பொருளாதார மந்தநிலை!
உலக வங்கியின் எச்சரிக்கைக்கு முன்னதாகவே ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஓர் அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization), நம் நாட்டின் வேலைவாய்ப்புகளை ஆராய்ந்து இந்தியாவின் பொருளாதார மந்தநிலை யின் காரணமாகவும், புதிய தொழில் தொடங்கப்படாமல் இருப்பதும் வேலையின்மையை அதிகரித்து வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நம் நாட்டில் வேலையின்மை பிரச்னை மிக அதிகமாக இருந்தது. படித்துப் பட்டம் பெற்றவர்களும் தொழில் திறமை பெற்றவர்களும், தங்களுக்குத் தகுதியான வேலை கிடைக்காமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். அதுமாதிரியானவர் களுக்கு கிடைத்த வேலை சாதாரணமானதாகவும் மிகக் குறைந்த சம்பளம் அளிக்கும் வகையிலும் இருந்தது. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில், நம் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அடுத்து வேலையில்லாத் திண்டாட்டம் வெகுவாகக் குறைந்தது. வேலை இருந்தும் வேலைக்குத் தகுதியான ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதன்பின், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, நம் நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும், அந்தப் பாதிப்பிலிருந்து நம் நாடு ஒருமாதிரியாக தப்பித்தது. இதனால் வேலைவாய்ப்பும் பெரிய அளவில் குறையாமல் இருந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு விவகாரத்தில் நம் நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மீண்டும் உலக வங்கியின் எச்சரிக்கையில் தெரிய வந்திருக்கிறது.
அதிக வேலைவாய்ப்புகள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் கம்போடியா, கத்தார், தாய்லாந்து, குவைத் போன்ற அரபு நாடுகள் இருந்துவருவதுபோல, வேலைவாய்ப்பின்மை அதிகம் இருக்கும் நாடுகளில் ஜிம்பாப்வே, தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் வரிசையில் நாமும் இருந்து வருகிறோம்” என்றவரிடம், நம் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்புள்ளதா என்று கேட்டோம்.
படிப்புக்குத் தக்க வேலைகள்!
‘‘2020-ல் வேலைவாய்ப்பு அதிகரிப்பது குறித்து சோமர்ஸ் அண்ட் ஃப்ராங்க்ளின் 2012-ல் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், 2012-ல் இருக்கும் நிலையானது தொடர்ந்தால், 2020-ல், உலக அளவில் 14% மட்டுமே வேலை வாய்ப்புகள் அதிகரித்திருக்கும் என்று தெரிவித்தது. மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளைப் படித்து விட்டு வெளியேறும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் 20 சதவிகிதமும், பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்து வெளியேறுபவர்களுக்கான வேலைவாய்ப்புகள் முறையே 22% மற்றும் 17 சதவிகிதமும் அதிகரித்திருக்கும்.
அதேபோல, அசோசியேட் டிகிரி, சான்றிதழ் படிப்புகள், மேல்நிலைப் பள்ளியுடன் படிப்பை முடிப்பவர்கள் மற்றும் மேல்நிலை பள்ளிப் படிப்புக்கும் குறைவான படிப்பை முடித்து வெளியேறுபவர்களின் வேலை வாய்ப்புகள் முறையே 18%, 17%, 12% மற்றும் 14% அதிகரித்து இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் சொல்லப் பட்டிருக்கிறது’’ என்று சொன்னார் அவர்.
வேலையின்மையைக் குறைக்க..!
வேலையின்மையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர் எடுத்துச் சொன்னார்.
‘‘நம் நாட்டின் வேலைவாய்ப்பில் உள்ள மிகப் பெரிய பிரச்னை, 94 சதவிகித வேலையாட்கள், வழக்கமான வேலைவாய்ப்புகள் இல்லாத, பிற வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இதனால் விரைவில் வேலை இழக்கும் பாதிப்புக்கு உள்ளா கின்றனர். அதனால் அந்தந்தப் படிப்புக்கு தகுந்த வேலை வாய்ப்பு களையே இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
அரசானது அனைத்துத் துறை சார்ந்த வேலைவாய்ப்பு விவரங்களை மையப்படுத்தி செய்தித்தாள்கள், இணையதளங்கள் வாயிலாக வெளியிட வேண்டும். உதாரணத்துக்கு, தனியார் வேலை தகவல் நிறுவனங்களான நவ்கரி, மான்ஸ்டர் டாட்காம் செயல்படுவதுபோல எல்லா துறை சார்ந்த வேலைவாய்ப்பு விவரங்களை வழங்க வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றத்துக்குரிய நடவடிக்கையை இந்திய அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும். இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வேலையின்மை யானது குறையும்.
ஒருசாராருக்கு மட்டுமே அதிக ஊதியத் தொகையை வழங்காமல், அனைவருக்கும் அதைப் பகிர்ந்து சமன் செய்ய வேண்டும். நாட்டின் கல்வித் திட்டங்களை மேம்படுத்துவது மற்றும் இளைஞர்களுக்குத் தொழில் சம்பந்தப்பட்ட பயிற்சிகளைக் கற்றுக் கொடுப்பதாலும் வேலையின்மைக் குறையும்.
வேலைகளைப் பகிர்ந்தளிப்பது, பணியாளர்களுக்கு வயது வரம்பை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் தொடங்குவது மீதான சட்ட விஷயங்களைத் தளர்த்த வேண்டும். உதாரணத்துக்கு, புதிதாக ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தால், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் சம்பளமாகக் குறிப்பிட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதையும், தொழிலுக்கான அதிக வரி விதிப்புகளை யும் தளர்த்த வேண்டும்.
வேலைகளின் தேவைக்கும், சப்ளைக்கும் இடையேயான வித்தியாசத்தைக் குறைக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு அரசிடம்தான் உள்ளது. அதனால் வேலை இல்லாதவர் களுக்கு மேலும் பல விஷயங்களைக் கற்றுத்தருவதற்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்களின் அறிவுத்திறனானது பட்டைத் தீட்டப்பட்டு வேலைக்குத் தகுதியானவர் களாக மாற்றும்’’ என்று முடித்தார்.
தொழில் துறையில் முதலீட்டை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழிற்சாலைகளைத் தொடங்கி, பணியாளர்களின் திறனை அதிகரித்தால் மட்டுமே நம் நாட்டில் வேலையின்மை பிரச்னை தீர்ந்து எதிர்காலம் ஏற்றத்துடன் இருக்கும்!