பிரிட்டனின் வெளியேற்ற முடிவால் ஐரோப்பிய யூனியனே உடையும் அபாயம்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற வாக்கெடுப்பின் முடிவால் பிரிட்டன் மட்டுமின்றி உலக பங்குச்சந்தையே நேற்று ஆட்டம் கண்டது. குறிப்பாக இந்திய பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி தெரிந்தது. அதேபோல் தங்கம், வெள்ளி விலை ஒரே நாளில் உச்சத்திற்கு சென்றது
இந்நிலையில் பிரிட்டன் வெளியேறுவதால் ஐரோப்பிய யூனியனே உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் வெளியேறினால் அதே பாணியில் மற்ற நாடுகளும் வாக்கெடுப்பு நடத்தி வெளியேறும் ஆபத்து இருப்பதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் டோனல்ட் டஸ்க் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். அவர் நினைத்தது போலவே இன்னும் ஒருசில நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் இதற்கென விரைவில் வாக்குப்பதிவு நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரிட்டனை தொடரந்து பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டில் பொதுவாக்கெடுப்பை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பிய யூனியனின் 6 முக்கிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், ஹாலந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் இன்று ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்தே ஐரோப்பிய யூனியன் என்ற ஒன்று இருக்குமா? இல்லையா? என்பது தெரியவரும்.