அதிமுக ஆட்சியை கவிழ்க்க சதியா? வைகுண்டராஜனின் ஒப்பன் பேட்டி
சமீபத்தில் அதிமுக தலைமையின் கடுங்கோபத்திற்கு ஆளான சசிகலா புஷ்பாவுக்கு பின்புலமாக இருப்பதாக கூறப்படும் பிரபல தொழிலதிபர் வைகுண்டராஜன், தான் எந்தவிதத்திலும் சசிகலாபுஷ்பாவுக்கு உதவி செய்யவில்லை என்றும் அதிமுக எம்.எல்.ஏக்களை இழுப்பதாக வெளிவந்துள்ள புகார் பொய்யானது என்றும் கூறியுள்ளார்.
நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: ‘‘நான் நீண்ட காலமாக கனிமவள தொழிலில் ஈடுபட்டு உள்ளேன். 1980-களில் இருந்தே இந்த தொழிலில் எனக்கு போட்டியாளராக தயா தேவதாஸ் என்பவர் இருந்து வருகிறார். அப்போது எம்.பி&யாக இருந்த தனுஷ்கோடி ஆதித்தனை பயனபடுத்தி அவர் சட்ட விரோதமாக கனிம மணலை கடத்துவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது உண்டு. அவருடைய தூண்டுதலில் குமரேசன் என்மீது அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார்.
சசிகலா புஷ்பாவுக்கு பண உதவி செய்கிறேன் என்றும் 20, 30 எம்.எல்.ஏ-க்களை வளைத்து வைத்து இருக்கிறேன் என்றெல்லாம் கூட செய்திகள் வருகின்றன. அதில் துளியளவும் உண்மை கிடையாது. தி.மு.க ஆட்சியில் இருந்தால் என்னை அ.தி.மு.க-வுக்கு நெருக்கமானவன் என்றும் அந்த கட்சியில் உள்ளவர்களுக்கு பினாமியாக செயல்படுகிறேன் என்றும் அவதூறு பரப்புகிறார்கள். அதே சமயம், அ.தி.மு.க ஆட்சியில் இருந்தால் என்னை தி.மு.க-வினருக்கு நெருக்கமானவன் என்று பேசுகிறார்கள்.
இப்போது, சசிகலா புஷ்பாவுக்கு நான் தான் பண உதவி செய்வதாகவும் அவருக்கு பின்புலமாக இருப்பதாகவும் பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள். சசிகலா புஷ்பாவுக்கு பண உதவி செய்ய வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு கிடையாது. முதல்வர் என் மீது கோபப்பட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு நான் சசிகலா புஷ்பாவுக்கு உதவிகள் செய்வதாக வேண்டுமென்றே பொய்த் தகவல்களை வெளியிடுகிறார்கள்.
நான் 20, 30 எம்.எல்.ஏ&க்களை வளைத்து வைத்து இருப்பதாக தகவல்களை பரப்பி, அதன் மூலமாக முதல்வரை என் மீது கோபப்பட வைத்து என தொழிலுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம். எனக்கு எதிராக இருப்பவர்கள் செய்யும் சதிச் செயல் இது. நான் சசிகலா புஷ்பாவுக்கு எந்த வகையிலும் ஆதரவாக இருக்கவில்லை என்பதே உண்மை. நான் கடவுளையும் சட்டத்தையும் மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறேன். அதனால், உண்மைகள் ஒரு நாள் வெளிவந்தே தீரும்’