14 நாடுகளில் முதலீடு செய்துள்ளாரா கார்த்திக் சிதம்பரம்?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் தமிழகத்தில்தான் அரசியல் கட்சிகள் பிரச்சாரம், விளம்பரம் என்ற பெயரில் மோதிக்கொள்கிறது என்றால் இந்த மோதல் தற்போது பார்லிமெண்ட் வரை பரவியுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் இன்று காலை நாடாளுமன்றம் கூடியவுடன் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் 14 நாடுகளில் முறைகேடாக சொத்துக் குவித்துள்ளதாகவும் இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தியதால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் முடங்கியது.
அதிமுகவினர்களுக்கு பதிலளித்த மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அதிமுக குற்றம்சாட்டும் சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் எம்பிக்கள் அல்ல. அதிமுக உறுப்பினர்கள் தங்களது கோரிக்கையை மத்திய அரசிடம்தான் தெரிவிக்க வேண்டும். தாம் மத்திய அரசு அல்ல என்று கூறினார். ஆனாலும் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
அதிமுகவின் இந்த திடீர் குற்றச்சாட்டுக்கு ‘பயனீர்’ என்ற ஆங்கில பத்திரிகையில் இன்று வெளிவந்த ஒரு செய்திதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ள கார்த்திக் சிதம்பரம், “சட்ட விதிகளுக்கு உட்பட்டே நான் தொழில் நடத்தி வருகிறேன். புகார் உண்மையில்லை என பலமுறை விளக்கம் தரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.