ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன் ‘புலி’ படத்திற்கு தடை விதிக்குமா நீதிமன்றம்? பெரும் பரபரப்பு

ரிலீஸுக்கு 3 நாட்களுக்கு முன் ‘புலி’ படத்திற்கு தடை விதிக்குமா நீதிமன்றம்? பெரும் பரபரப்பு
puli ban
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் ரிலீஸாக இன்னும் ஒரு வாரமே உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் முன்பதிவு ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் ‘புலி’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தஞ்சை நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் இயக்கிய ‘தாகபூமி’  என்னும் குறும்படத்தின் கதைதான் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய “கத்தி’ என்ற பெயரில் திரைப்படத்தின் கதை என்றும், தன்னுடைய கதையை திருடி ‘கத்தி’ படம் எடுத்து வெளியிடப்பட்டதாகவும், இதற்காக முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் தனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரி, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 2014ஆம் வருடம் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின் விசாரணை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது அடுத்த மாதம் 26-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்பு ராஜசேகர் நேற்று, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள புலி படத்தையும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இனிமேல் இயக்கி, தயாரித்து வெளிவரவுள்ள படங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) ராஜசேகர், இந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு இயக்குநர் முருகதாஸ், மற்றும் நடிகர் விஜய் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மீண்டும் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமை வரவுள்ளது. அன்றைய தினத்தின் நீதிமன்ற உத்தரவை பொறுத்தே ‘புலி’ ரிலீஸ் உறுதி செய்யப்படும் என கூறப்படுவதால் இதுகுறித்து படக்குழுவினர் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply