இளையதளபதி விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் ‘புலி’ படத்தை அடுத்து அட்லியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி உறுதியாகின்ற நிலையில் அதற்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. விஜய் 60 படத்தை தயாரிக்க இருப்பவர் ஓட்டல் அதிபரும் பிரபல நடிகருமான ஆர்.கே என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தி.நகர் மற்றும் சாலிகிராமத்தில் ‘வாங்க சாப்பிடலாம்’ என்ற ஓட்டலை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்த ஆர்.கே திடீரென விஜய் படத்தை தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை வந்து இளையதளபதியை அணுகினாராம். அவருடைய ஆர்வத்தை பார்த்த விஜய், சம்பளத்திற்கு பதிலாக தி.நகர் ஓட்டலை தன் பெயருக்கு மாற்றினால் கால்ஷீட் தருவதாக கூறியதும் ஆர்.கே. முதலில் அதிர்ந்து விட்டாராம். ஆனால் விஜய் படத்தை தயாரித்தால் தி.நகர் ஓட்டல் போன்று பத்து ஓட்டல்களை விலைக்கு வாங்கலாம் என அவருடைய நண்பர்கள் வட்டாரம் ஆலோசனை கூறியதை அடுத்து தற்போது விஜய்யின் நிபந்தனைக்கு ஆர்.கே. ஒப்புக்கொண்டாராம்.
விஜய் அந்த ஓட்டலை விலைக்கு வாங்கி அந்த இடத்தில் பிரமாண்டமான கல்யாண மண்டபம் கட்ட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் நடிக்க இருக்கும் படத்தை ஆர்.கே தயாரிப்பதோடு இயக்கவும் உள்ளாராம். ஒழுங்காக ஓட்டலை வைத்து சம்பாதிக்கிறதை விட்டுட்டு ஆர்.கே. தேவையில்லாமல் ஒருசிலரின் தவறான வழிகாட்டலால் ஏமாந்து போய் அகலக்கால் வைப்பதாக ஒருசில ஆர்.கே. அபிமானிகள் புலம்பி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்.