சட்டப்படி சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆக முடியுமா?
நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக போட்டியின்றி நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கட்சியின் விதிமுறையின்படி அவர் பொதுச்செயலாளர் ஆக முடியாது என்றே கூறப்படுகிறது. அதாவது அதிமுக கட்சி விதி, 43ன் படி, அதிமுகவில் உள்ள அடிப்படை விதிகளில், எப்போதும், யாராலும், எந்த மாற்றமும் கொண்டு வர முடியாது.
கட்சி விதி, 305ன் படி, ஒரு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இவற்றை மீறி, தங்களுக்கு சாதகமாக, பொதுக்குழுவை மாற்றி அமைத்து, சசிகலா பொதுச்செயலரானால், அது சட்டவிரோத செயலாகும்.
கடந்த, 2011 டிசம்பரில், சசிகலா, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 2012 மார்ச்சில் மன்னிப்பு கடிதம் வழங்கிய பின், மீண்டும் சேர்க்கப்பட்டார்; ஆனால், அவருக்கு உறுப்பினர் கார்டு வழங்கப்படவில்லை.
ஆரம்பகால உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறேன் என்ற அடிப்படையில், பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலா போட்டியிட்டால், அவரது உறுப்பினர் அட்டையின் நம்பகத் தன்மையை, சி.பி.ஐ., சோதனை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
இவ்வாறு கட்சி விதிகளில் சிக்கல் இருப்பதால் நாளை என்ன நடக்கும் என்பதை அறிய தமிழகமே காத்திருக்கின்றது