போருக்கு தயாராகுங்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அழைப்பு

போருக்கு தயாராகுங்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அழைப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் இன்றைய கடைசி தினத்தில் அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் ஆவேசமாக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரசிகர்களுடனான இந்த சந்திப்பை சிறப்பாக நடத்த உதவிய அனைத்து நிர்வாகிகளுக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதுமட்டுமின்றி இந்த சந்திப்புக்கு சரியான முறையில் பாதுகாப்பு கொடுத்த காவல்துறையினர்களுக்கும், என்னை விரட்டி விரட்டி பேட்டி எடுத்த மீடியாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்

முதல் நாள் நான் பேசியபோது நான் அரசியலுக்கு வந்தால் ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசியது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததையும் காண முடிந்தது. ஆனால் எதிர்ப்பு இல்லாமல் எதுவும் முடியாது. குறிப்பாக அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். சமூக வலைத்தளங்களில் என்னை விமர்சனம் செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எழுதும்போது மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோக்கின்றனர் என்பதுதான் ஒரு வருத்தமாக உள்ளது.

ஒரே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினிகாந்த் தமிழனா? என்று பலர் கேட்கின்றனர். எனக்கு இப்போது 67 வயது ஆகின்றது. நான் வெறும் 23 ஆண்டுதான் கர்நாடகத்தில் இருந்தேன். மீதி 44 ஆண்டுகள் தமிழகத்தில் தான் இருக்கின்றேன். தமிழர்கள் கூடவே வளர்ந்தேன். எனக்கு பேர், பெயர், புகழ், பணம் என்று அனைத்தையும் அள்ளிக்கொடுத்து நீங்கள்தான் என்னை தமிழனாக மாற்றிவிட்டீர்கள். நான் இப்போது பச்சைத்தமிழன். ஒருவேளை தமிழ்மக்கள் என்னை தூக்கி போட்டால் நான் விழும் இடம் இமயமலையாகத்தான் இருக்குமே தவிர வேறு எந்த மாநிலமாகவும் இருக்காது

என்னை வாழ வைத்த தெய்வங்கள் நீங்கள். என்னை நன்றாக வாழ வைத்த நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நான் நினைப்பது தவறா? ஆனால் ஒருசிலர் கேட்கின்றனர், தமிழர்களை காப்பாற்ற இங்கு தலைவர்கள் இருக்கின்றனர், நீங்கள் தேவையில்லை என்று. இருக்கின்றார்கள் நான் இல்லை என்று கூறவில்லை. ஸ்டாலின் மிகச்சிறந்த நிர்வாகி, அவருக்கு மட்டும் சுதந்திரம் கொடுத்தால் மிகப்பெரிய அளவில் சாதிப்பார் என்று சோ அவர்கள் கூறியுள்ளார். அன்புமணி ராமதாஸ் நல்ல படிப்பாளி, உலகம் முழுவதும் சுற்றிய முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர், தலித்துக்காக போராடி வரும் திருமாவளவன் அவர்களும் ஒரு திறமைசாலிதான். சீமான், ஒரு நல்ல போராளி, அவர் தெரிவித்த ஒருசில கருத்துக்களை கேட்டு பிரமித்து போயுள்ளேன்; ஆனால் சிஸ்டம் கெட்டு போய் உள்ளது, ஜனநாயகமே கெட்டு போயுள்ளது. எனவே சிஸ்டத்தை மாற்றம் செய்ய வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும்

எதிர்ப்பு இருந்தால் தான் வளர முடியும், நமக்கு கிடைக்கும் திட்டுக்கள், விமர்சனங்கள் அனைத்துமே நமக்கு உரம் மாதிரி. நம்மை எதிர்ப்பவர்கள் நமக்கு நன்மை செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு ராஜாவிடம் போர்ப்படைகள் என்று ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருப்பார்கள். ஆனால் போர் என்று வந்துவிட்டால் நாட்டில் உள்ள ஆண்மகன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டிற்காக போராடுவார்கள், அதுவரை அவர்கள் அனைவரும் தங்கள் கடமையை செய்துவருவார்கள். அதேபோல் எனக்கும் சில கடமைகள் உள்ளன, உங்களுக்கும் கடமைகள் உள்ளன, நாம் நம்முடைய கடமைகளை பார்போம், போர் என்று வரும்போது களத்தில் இறங்குவோம்’

இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளர்.

Leave a Reply