அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த நீதிபதி. தமிழர் நியமனம் செய்யப்பட வாய்ப்பு.
அமெரிக்காவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் ஒன்பது நீதிபதிகள் இருப்பது வழக்கம். அமெரிக்க அரசின் சட்டத்தின்படி இந்த ஒன்பது நீதிபதிகளும் மரணம் அடையும் வரை பணியில் இருக்கலாம். இவர்களுக்கு ஓய்வு வயது என்பது கிடையாது. இந்நிலையில் சமீபத்தில் இந்த ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ஸ்காலியா என்பவர் மரணம் அடைந்தார். இவருடைய இடத்தை நிரப்புவதற்காக அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது 3 பேர் கொண்ட நீதிபதிகளின் பட்டியல் தயாராகியுள்ளது. இந்த பட்டியலில் ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார். அவர் பெயர் ஸ்ரீசீனிவாசன் என்பது ஆகும். இவர் சுப்ரிம்கோர்ட்டின் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டதால் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் தமிழர் என்ற பெருமை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலம்பியா மாகாணத்தின் சர்க்கியூட் நீதிபதியாக பணியாற்றி வரும் ஸ்ரீ சீனிவாசன், நீதிபதி மேரிக் பி கார்லேண்ட், நீதிபதி பிரவுண் ஜேக்சன் ஆகியோர்களின் பெயர்கள் அடுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி குழுவில் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஸ்ரீ சீனிவாசனின் தந்தை தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர். அவரது தாயார் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக இவர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.