விஜயகாந்த் சிங்கப்பூர் செல்வது உண்மையா? பரபரப்பு தகவல்
மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் இன்றுமுதல் ஆரம்பமாகும் பிரச்சாரத்தில் கலந்து கொள்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்லவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த செய்தியை தேமுதிக மறுத்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடிக்கடி சிங்கபூருக்கு சென்று சிகிச்சை செய்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் செய்வதற்கு முன் இன்னொரு முறை சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகவும், நேற்றைய விமான டிக்கெட் லிஸ்ட்டில் அவரது பெயர் இடம்பெற்றிருந்ததாகவும் வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவின.
ஆனால் இந்த செய்தியை விஜயகாந்தின் ஃபேஸ்புக் பக்கம் மறுத்துள்ளது. அதில், ‘”என்னை பற்றியோ நமது கூட்டணி குறித்தோ பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நமது லட்சியம்! வெல்வது நிச்சயம்! நமது முரசு! நாளைய தமிழக அரசு!” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தே.மு.தி.க. இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘தே.மு.தி.க. தலைவர் கேப்டன் பற்றியும், தே.மு.தி.க.வை பற்றியும் அவதூறு செய்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளையும் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூகவலைத்தளங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதுபோன்ற செய்திகளை வெளியிடாமல், உண்மை செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக கேப்டன் அவர்கள் சிங்கப்பூருக்கு சிகிச்சைபெற செல்வதாக இன்று வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொண்டு வெளியிட வேண்டுகிறேன்” என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.