ஸ்ரீரங்கத்தில் வரும் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து அமைச்சர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் முக்கிய தலைவர்களும் ஸ்ரீரங்கத்தை சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக கட்சி வேட்பாளரை தேமுதிக ஆதரித்து பிரச்சாரம் செய்யுமா? முக்கியமாக விஜய்காந்த் பிரச்சாரம் செய்வாரா? என்பது குறித்த கேள்விகள் கூட்டணி கட்சிகளிடையே தோன்றியுள்ளது.
இந்நிலையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் தேர்தலில். பாமக உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், பாஜகவுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அதனால் தேமுதிகவினர் அனைவரும் கடுமையாகப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், ஸ்ரீரங்கம் தேர்தலில் விஜயகாந்த் பிரசாரம் செய்வது தொடர்பாக எந்தக் கருத்தையும் கூட்டத்தில் தெரிவிக்கவில்லை. ஆனால், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று உறுதியாகக் கூறி வருகிறார்.