புதிதாக ரேசன் கார்டுகள் வேண்டிவிண்ணப்பம் செய்பவர்களுக்கு 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டம், சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்திற்கு, மாதாந்திர ஒதுக்கீட்டு ஆணை அந்த மாதத்தின் 3-ந் தேதிக்குள்ளாகவே பிறப்பிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் வலியுறுத்தினார்.
மாதந்தோறும் 2-ம் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் குறைதீர் முகாம்களில், இம்மாதத்தில் இதுவரையில், 3 லட்சத்து 53 ஆயிரத்து 914 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 661 மனுக்கள் அன்றைய தினத்திலேயே தீர்வு செய்யப்பட்டும், மீதமுள்ள 16 ஆயிரத்து 253 மனுக்கள் பின்னரும் தீர்வு செய்யப்பட்டுள்ளன.
இன்று வரை 11 லட்சத்து 10 ஆயிரத்து 871 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 24 ஆயிரத்து 626 புதிய குடும்ப அட்டைகள் மனுதாரர்களுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளது. இன்று வரை, 3 லட்சத்து 70 ஆயிரத்து 538 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 23 ஆயிரத்து 339 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுள் 663 பேர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று இந்த கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசினார்.
புதிய ரேஷன் அட்டைகள் கோரி பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.