ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மதுவிலக்கு. அன்புமணி

ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மதுவிலக்கு. அன்புமணி

anbumaniதமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவக்கி மக்களை சந்தித்து வரும் நிலையில் பாமக சார்பில் அன்புமணியும் தமிழகம் முழுவதும் தீவிரமாக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ என்று கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் அன்புமணி மேலும் பேசியதாவது, “” வருமானத்தைக்  குறிக்கோளாகக்  கொண்டு அதிமுக அரசு மதுகடைகளை நடத்தி வருகிறது. மற்ற மாநிலங்களில் 2 முதல் 3 சதவீதம் வரை தான் மது மூலம் வருமானம் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மது மூலம் 35 சதவீதம் வருமானம் வருகிறது என அரசாங்கம் கூறுவது அவமானம். வெட்கக்கேடானது. வருமானத்தைப்  பெருக்க எவ்வளவோ வழிகள் உள்ளன.

அதிமுக அரசு, பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை வழங்குகிறது. சாராயக் கடைகளால் தங்கத் தாலிகள் பறிக்கப்படுகின்றன.வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் வென்று, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பதவியேற்ற ஒரு மணி நேரத்தில், முதல் கையெழுத்தே பூரண மதுவிலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதற்கான கையெழுத்துதான். தமிழகத்தில் மதுவால் ஏற்படும் மோசமான நிலை முற்றிலும் மாற வேண்டும். மாற்றத்தை நாம் கொண்டு வர வேண்டும்.

வருகிற 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பூரண மதுவிலக்கைக்  கொண்டு வர வேண்டும். இது பாமக கோரிக்கை மட்டுமல்ல. தமிழக மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும். இந்தக்  கோரிக்கையை ஏற்று பூரண மதுவிலக்கை அதிமுக அரசு அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வருகிற தேர்தலில் அதிமுக விளைவுகளைச்  சந்திக்க வேண்டியது இருக்கும்”

இவ்வாறு அன்புமணி பேசினார்

Leave a Reply