ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று டெல்லி ஐஐடி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க், “இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்தமுடியாது என்று கூறினார். மேலும் மாணவர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் அவர் கலந்துரையாடினார். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் உற்சாகமாக பதிலளித்தார். மாணவர்கள் கேள்விகளும் அதற்கு மார்க் அளித்த பதில்களும் பின்வருமாறு:
இந்தியா வர வேண்டும் என்ற ஆர்வம் ஏன் வந்தது?
ஃபேஸ்புக்கின் முக்கிய மார்க்கெட் இந்தியா. இங்குதான் 13 மில்லியன் பேர் ஃபேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் பலர் இன்டர்நெட்டை கூட பயன்படுத்துவதில்லை. அதனால் மக்களின் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள இங்கு வாய்ப்புக்கள் அதிகம். இந்திய மக்களிடையே தொடர்பை ஏற்படுத்துவது அவசியம்.
உலகிலேயே ஃபேஸ்புக் அதிகம் பயன்படுத்துபவர்களில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உங்களால் உலக நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்த முடியாது. எனவே இந்தியாவில் ஆன்லைன் பயன்பாடு இன்னும் அதிகரித்து பில்லியன் எண்ணிக்கையைத் தொட வேண்டும் என விரும்புகிறோம்.
அதனால் இந்தியா வந்துள்ளது உற்சாகமாக உள்ளது. இன்டர்நெட் பயன்படுத்துபவர்களால் வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். வறுமையை ஒழிக்கவும் வழி செய்ய முடியும்.
கேண்டி கிரஷ் (candy crush) கோரிக்கைகளை எவ்வாறு தடுப்பது?
அதற்கான தீர்வை காணும் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். விரும்பும் ஃ பேஸ்புக் பயனாளிகளுக்கு மட்டும் கேண்டி கிரஷ் கோரிக்கை வரும் வசதியை விரைவில் கொண்டுவருவோம்.
தற்போதுள்ள சூழலில் ஃபேஸ்புக்கிடம் இருந்து எந்த மாதிரியான புதுமைகளை எதிர்பார்க்கலாம்?
அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இன்னும் மேன்மையான கம்ப்யூட்டர் சிஸ்டம்களை உருவாக்க நினைக்கிறோம். அதன் மூலம் உலகின் பல மொழிகளை இன்னும் எளிதாக மொழி பெயர்க்கவும், எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும்.
Internet.org என்ற திட்டத்தின் மூலம் இனைய சேவையை கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த திட்டம் மூலம் 12 மில்லியன் பேர் இணைய வசதி பெறுகின்றனர்.
ஃபேஸ்புக் மூன்று முக்கிய தடைகளை அகற்ற முயற்சித்து வருகிறது. அதன் படி இணைய வசதி பெறுவதற்காக சாத்தியமான வழிகளுக்கு முதலீடு செய்வது, குறைந்த இணைய டேட்டாவை பயன்படுத்தும் அப்ளிகேசன்கள் மீது கவனம் செலுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றை செயல்படுத்துவோம்.
மார்க் சூப்பர் பவராக உதவியது எது?
மிகச் சிறந்த தொழில்நுட்பங்களில் ஒன்றுதான் மக்களை சூப்பர் பவராக்குகிறது.
கல்வித்துறையில் ஃபேஸ்புக்கின் பங்கு?
ஆன்லைன் மூலம் கல்விக்கான விபரங்களை அளித்து வருகிறோம். இது முன்னேற்றத்திற்கான பெரிய பங்கு.
நெட் நியூட்ராலிட்டி பற்றி?
ஜீரோ ரேட் தயாரிப்புக்கள் மாணவர்களுக்கு பெரிதும் உதவும். மீனவர்களும் இதை பயன்படுத்தி தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளலாம்.
தாஜ்மஹால் சென்ற அனுபவம் பற்றி…
தாஜ்மஹால் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அது காதலின் அடையாளம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மார்க், இந்தியா கேட் பகுதியில் காலையில் தனது சகாக்களுடன் வாக்கிங் , ஜாக்கிங் சென்றார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
English Summary: Without India, there is no facebook