நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட அதேநாளில் மீண்டும் ஓடும் காரில் ஒரு பலாத்காரம்
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து சரியாக நான்கு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் சரியாக அதே நாளான இன்று ஓடும் காரில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனால் டெல்லி பெண்கள் வாழ தகுதியான நகர்தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் டெல்லியில் வேலைக்காண நேர்காணல் ஒன்றுக்கு வந்துள்ளார். நேர்காணல் முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் டிரைவர் ஒருவர், அந்த பெண்ணை வீட்டில் இறக்கிவிடுவதாக தெரிவித்துள்ளார். அந்த காரில் உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கரும் ஒட்டியிருந்தால் அதை நம்பி அவர் காரில் ஏறியுள்ளார்.
ஆனால் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு காரை செலுத்தாமல், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஓட்டுநர் காரை நிறுத்தியுள்ளார். பின்னர் காருக்குள் வைத்து அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த அந்த இளம்பெண், தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அப்பகுதியில் ரோந்து வந்த காவல்துறை வாகனம் ஒன்று, இளம்பெண்ணின் சத்தத்தை கேட்டு அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை தொடந்து தலைமறைவாக இருந்த டிரைவரை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.