கொடநாடு எஸ்டேட் எனக்குத்தான் சொந்தம். இரவில் பிரச்சனை செய்த மர்ம பெண் யார்?
தமிழக முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருக்கும்போதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் அவ்வப்போது கொடநாடு எஸ்டேட் சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். சமீபத்தில் கூட அவர் கொடநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த பயணம் பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு ஒரு மர்ம பெண், கொடநாடு எஸ்டேட் காவலாளியிடம், இந்த எஸ்டேட் எனக்கு சொந்தமானது. நான் பால் காய்ச்சி குடிவர போகிறேன். உடனே காலி செய்யுங்கள் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டின் 4வது கேட் வாசலில் நேற்று இரவு வந்து நின்ற மர்ம பெண் ஒருவர், ”கொடநாடு எஸ்டேட் எனக்கு சொந்தமானது. அதை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது. இதற்கான பத்திரங்கள் எனது பெயரில்தான் உள்ளது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஆடி மாதம் பிறப்பதால் அதற்கு முன்பு பால் காய்ச்சி குடியேற போகிறேன்’ என்று கூறினார்.
அவருடைய பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி, உடனே இதுகுறித்து எஸ்டேட் மேனேஜருக்கு தகவல் கூறினார். பின்னர் எஸ்டேட் நிர்வாகத்தினர், கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக போலீஸார் அந்த பெண்ணை விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த பெண் கோவை, உடையாம்பாளையத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கொடநாடு எஸ்டேட் தன்னுடையது என்றும், அதை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் கூறி பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.