ஒன்பது மாதங்களாக கர்ப்பமானதை அறியாமல் இருந்த அமெரிக்க பெண்
[carousel ids=”75352,75353,75354″]
ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு தெரிந்து கொண்டு விடுவார். அதுவும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கர்ப்பம் உண்டானதை அறிய பல நவீன வழிகள் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் தான் கர்ப்பமாக இருந்ததை ஒன்பது மாதங்களாக தெரியாமல் இருந்துள்ளார். அவருக்கு குழந்தை பிறக்க ஒரு மணி நேரம் இருக்கும்போதுதான் தான் கர்ப்பமாக இருப்பது அவருக்கு தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மஸாசூசெட்ஸ் என்னும் மாநிலத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஜூடி பிரவுன். இவருக்கு திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருக்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு வயிற்றுவலிக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் அவர் நிறைமாத கர்ப்பமாக இருப்பதாகவும் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அவருக்கு குழந்தை பிறந்துவிடும் என்பதும் தெரிய வந்தது.
திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லாமல் ஏங்கிக்கொண்டிருந்த ஜூடி பிரவுனுக்கு மருத்துவர்களின் இந்த பதில் அவருக்கு இன்ப அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. 47 வயதை எட்டியுள்ள ஜூடி, தனது உடலில் சில மாதங்களாக ஏற்பட்ட மாற்றத்தை முதுமையின் அடையாளமாக கருதி வந்ததால் அவர் கர்ப்பமானதை அறியாமல் இருந்துள்ளார். தற்போது இந்தத் தம்பதிக்கு ஆரோக்கியமான, மூன்றரைக் கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்துள்ளது. அவளுக்கு கரோலின் ரோஸ் எனப் பெயரிட்டுள்ளனர்