ஜெயலலிதாவுக்கு அருள்வாக்கு சொல்ல அப்பல்லோவுக்குள் நுழைய முயன்ற பெண்ணால் பரபரப்பு
கடந்த சில நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு அருள்வாக்கு சொல்வதற்காக மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற சேலம் பெண் சாமியார் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பெண் போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன் இன்னும் அதிமுக தொண்டர்கள் குவிந்து இருக்கின்றனர். அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்று தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில் நேற்றிரவு திடீரென கையில் சூலாயுதத்துடன் பெண் சாமியார் ஒருவர் அப்பல்லோ மருத்துவமனைக்குள் செல்ல முயன்றார். அவரை பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீஸார் தடுத்து நிறுத்தினர்
அப்போது அந்த பெண் சாமியார் போலீஸாரிடம் ‘அம்மா நூறுவருஷம் நல்லா இருப்பார்கள்’ என்று அருள் வந்ததுபோல் ஆவேசத்துடன் கூறினார். தொடர்ந்து அவரை பெண் போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பெண் சாமியார் குறித்து போலீஸார் விசாரணை செய்ததில் அவரது பெயர் ஜெயந்தி என்றும், சேலம் மாவட்டம், அழகாபுரத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் கேட்ட போது, “நேற்றிரவு அப்போலோ மருத்துவமனை முன்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தோம். அப்போது ஒரு பெண் சாமியார், கையில் சூலாயுதத்துடன் வேகமாக வந்தார். அவரிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அம்மாவைப் பார்த்து அருள்வாக்கு சொல்லப்போகிறேன் என்றவர், திடீரென அம்மா என்று கூச்சலிடத் தொடங்கினார். உடனடியாக போலீஸ் உயரதிகாரிகள் வந்து அவரிடம் பேசினர். பிறகு அங்கு இருந்த போலீஸாருக்கு விபூதி கொடுத்து விட்டு அவர் சென்றார்” என்று கூறினர்.